போலி பணி நியமன ஆணை கொடுத்து கிராம நிர்வாக உதவியாளர் ₹12 லட்சம் மோசடி எஸ்பியிடம் புகார் போலீஸ், கோர்ட்டில் கிளார்க் வேலைக்கு

வேலூர், நவ.30: போலீஸ், கோர்ட்டில் கிளார்க் வேலைக்கு போலி பணி நியமன கொடுத்து கிராம நிர்வாக உதவியாளர் ₹12 லட்சம் மோசடி செய்ததாக எஸ்பியிடம் புகார் அளித்தனர். வேலூர் எஸ்பி அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் எஸ்பி மணிவண்ணன் தலைமையில் நேற்று நடந்தது. ஏடிஎஸ்பி பாஸ்கரன் முன்னிலை வகித்தார். அப்போது குடியாத்தம் பாக்கம் கிராமத்தை சேர்ந்த முத்து என்பவர் அளித்த மனுவில், எங்கள் பகுதியை சேர்ந்த கிராம நிர்வாக உதவியாளர் குணசேகரன், எனக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமானார். அவர் என்னிடம் நீதிமன்றத்தில் கிளார்க் பணியிடம் பெற்றுத்தருவதாக கூறினார். அவர் கூறியபடி ₹6 லட்சம் கொடுத்தேன்.
சில நாட்களில் அரசு பணி நியமன ஆணை எனக்கூறி ஒரு ஆவணத்தை கொடுத்தார். அதை பெற்றுக்கொண்டு நீதிமன்றத்திற்கு சென்றேன். அப்போது அந்த நியமன ஆணை போலி என தெரிந்தது. இதுகுறித்து குணசேகரிடம் கேட்டோம். அவர் பணத்தை திரும்ப தருவதாக கூறினார். ஆனால் கடந்த 4 ஆண்டுகளாக பணத்தை தரவில்லை. குடியாத்தம் உதயகுமார் என்பவரும் பாக்கம் கிராமத்தை சேர்ந்த கிராம நிர்வாக உதவியாளர் குணசேகரன், தனக்கு போலீஸ் வேலை வாங்கித்தருவதாக கூறி ₹6 லட்சம் பெற்று மோசடி செய்ததாக தனியாக புகார் அளித்தார். மனுவை பெற்றுக்கொண்டு எஸ்பி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

The post போலி பணி நியமன ஆணை கொடுத்து கிராம நிர்வாக உதவியாளர் ₹12 லட்சம் மோசடி எஸ்பியிடம் புகார் போலீஸ், கோர்ட்டில் கிளார்க் வேலைக்கு appeared first on Dinakaran.

Related Stories: