கனமழை, காற்றிலும் சுடர்விட்டு பிரகாசித்த மகாதீபம் ஏராளமான பக்தர்கள் தரிசனம் திருவண்ணாமலையில் 4வது நாளாக

திருவண்ணாமலை, நவ.30: திருவண்ணாமலையில் அண்ணாமலை மீது கடந்த 26ம் தேதி ஏற்றப்பட்ட மகா தீபம், தொடர்ந்து 4வது நாளாக நேற்று காட்சியளித்தது. விட்டுவிட்டு பெய்யும் கனமழை, பலத்த காற்றிலும் சுடர்விட்டு பிரகாசித்த தீபத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற மகாதீப பெருவிழா, கடந்த 26ம் தேதி விமரிசையாக நடந்தது. அதையொட்டி, அன்று மாலை 6 மணியளவில், 2,668 அடி உயர அண்ணாமலை மீது மகாதீபம் ஏற்றப்பட்டது. அப்போது, சுமார் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலையில் திரண்டிருந்து தரிசனம் செய்தனர். இந்நிலையில், அண்ணாமலையார் கோயில் ஆன்மிக வழக்கப்படி, மலை மீது தொடர்ந்து 11 நாட்களுக்கு மகாதீபம் காட்சிதரும். அதன்படி, 4வது நாளான நேற்று மாலை 6 மணிக்கு, மலை மீது மகாதீபம் ஏற்றப்பட்டது. வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தம் மற்றும் வடகிழக்கு பருவமழை தீவிரம் காரணமாக, திருவண்ணாமலையில் விட்டு விட்டு பரவலான மழை பெய்கிறது. அதோடு, மலை மீது பலத்த காற்றும் வீசுகிறது.

ஆனாலும், மழையிலும், காற்றிலும் அணையாமல் சுடர்விட்டு மகாதீபம் காட்சியளிக்கிறது. மேலும், மலை மீது மகாதீபம் ஏற்றும் திருப்பணி தடையின்றி நடந்து வருகிறது. தீபம் ஏற்றுவதற்காக, தினமும் நெய் மற்றும் திரி, கற்பூரம் மற்றும் பூஜை பொருட்கள் அண்ணாமலையார் கோயிலில் இருந்து மலை உச்சிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மலையில் தீபம் ஏற்றும் முறைதாரர்களான பர்வதகுலத்தினர் மற்றும் கோயில் திருப்பணி ஊழியர்கள், மழையையும், காற்றையும் பொருட்படுத்தாமல் மலைமீது முகாமிட்டு தினமும் தீபம் ஏற்றும் திருப்பணியை நிறைவேற்றி வருகின்றனர். மலை மீது வரும் 6ம் தேதி வரை மகாதீபம் காட்சிதரும். மேலும், மலை மீது மகாதீபம் காட்சிதரும் நாட்களில் கிரிவலம் செல்வதும், கோயிலில் வழிபடுவதும் சிறப்புக்குரியது. எனவே, அண்ணாமலையார் கோயிலுக்கு பக்தர்களின் வருகை கடந்த சில நாட்களாக அதிகரித்திருந்தது. விடுமுறை நாட்களான வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் வருகை வெகுவாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post கனமழை, காற்றிலும் சுடர்விட்டு பிரகாசித்த மகாதீபம் ஏராளமான பக்தர்கள் தரிசனம் திருவண்ணாமலையில் 4வது நாளாக appeared first on Dinakaran.

Related Stories: