2022 அக்டோபரில் ஒன்றிய அரசு அறிமுகப்படுத்திய தகவல் தொழில்நுட்ப கொள்கை அடிப்படையில் சமூக ஊடகங்கள் புதிய பயனர் கொள்கையை புதுப்பிக்கும்படி ஒன்றிய அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து யூடியூப்களில் டீப்பேக் வீடியோ மற்றும் படங்கள் வெளியாவதை தடுக்க கூகிள் நடவடிக்கை எடுத்து உள்ளது. புதிய வீடியோக்கள் பதிவிடுவதற்கான விதிமுறைகளை கூகிள் கடுமையாக்கி உள்ளது.
அதில் கூறியிருப்பதாவது:
அடையாளம் காணக்கூடிய நபரின் முகம் அல்லது குரல் ஆகியவற்றை ஏஐ தொழில் நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட அல்லது பிற செயற்கை அல்லது மாற்றப்பட்ட உள்ளடக்கத்தை பற்றி பயனர்கள் குறிப்பிட வேண்டும். ஏனெனில் டீப்பேக் போன்ற வீடியோக்கள் யூடியூப்பில் இருந்து அகற்றுவதற்கு இது உதவும்.
இதுபோன்ற உள்ளடக்கத்தைப் பற்றி விளக்கக் குழு மற்றும் வீடியோ பிளேயரில் உள்ள லேபிள்கள் மூலம் பார்வையாளர்களுக்குத் தெரிவிப்போம். இந்திய அரசுடன் நாங்கள் ஒத்துழைப்போம். ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி டீப்பேக் வீடியோக்களுக்கு எதிரான சவாலை ஒன்றாக எதிர்கொள்வதற்கும் பொறுப்பான அணுகுமுறையை உறுதி செய்வோம். ஒருவரின் முகம் அல்லது குரல் அவர்களின் அனுமதியின்றி டிஜிட்டல் முறையில் உருவாக்கப்படும் அல்லது அவர்களை தவறாகக் குறிப்பிடும் சந்தர்ப்பங்களில் இது குறித்து உண்மை தன்மையை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஐஐடியில் ₹9 கோடியில் மையம்
டீப்பேக் வீடியோக்களை கண்டறிய சென்னை ஐஐடியில் முதல் பல்துறை மையத்தை உருவாக்க ரூ.9 கோடி முதலீடு செய்துள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது.
The post டீப்பேக் வீடியோ பிரச்னை; யூடியூபர்களுக்கு கடும் கட்டுப்பாடு: புதிய விதிமுறைகளை அறிவித்தது கூகுள் appeared first on Dinakaran.