உத்தரகாண்ட் சுரங்கத்தில் இருந்து மீட்கப்பட்ட 41 தொழிலாளர்களுக்கு எய்ம்சில் பரிசோதனை: ஹெலிகாப்டரில் ரிஷிகேஷ் அழைத்துச் செல்லப்பட்டனர்; பிரதமர் மோடி வீடியோகாலில் பேசி வாழ்த்து

உத்தரகாசி: உத்தரகாண்ட் சுரங்கத்தில் இருந்து மீட்கப்பட்ட 41 தொழிலாளர்களும் உடல் மற்றும் மன நல பரிசோதனைக்காக ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர். முன்னதாக அவர்களிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசி வாழ்த்து தெரிவித்தார்.

17 நாள் முயற்சிக்கு வெற்றி: உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் சில்க்யாரா பகுதியில் கட்டப்பட்ட 4.5 கிமீ சுரங்கப்பாதை கடந்த 12ம் தேதி இடிந்ததில் 41 தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக் கொண்டனர். தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர், இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள், பல்வேறு அரசு துறை அதிகாரிகள், சர்வதேச நிபுணர்கள் என ஏராளமானோர் இணைந்து 17 நாட்கள் இரவு, பகலாக கடினமாக போராடி நேற்று முன்தினம் 41 தொழிலாளர்களையும் பத்திரமாக மீட்டனர். இதற்காக நாடு முழுவதும் மீட்புப்படையினருக்கு வாழ்த்துக்கள் குவிகின்றன.

எலி வளை நிபுணர்களுக்கு ரூ.50,000: கடைசி தருணத்தில் தொழிலாளர்களை மீட்க பெரும் உதவி புரிந்த ‘எலி வளை’ சுரங்க தொழில்நுட்ப நிபுணர்கள் 12 பேருக்கும் தலா ரூ.50,000 நிதி வழங்கப்படுமென முதல்வர் தாமி அறிவித்தார். ரிஷிகேஷ் சென்றனர்: இதைத் தொடர்ந்து பிற்பகலில் 41 தொழிலாளர்களும் இந்திய விமானப்படையின் சினூக் ஹெலிகாப்டர் மூலம் ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களது உறவினர்கள் பஸ் மூலமாக ரிஷிகேஷ் அழைத்து வரப்பட்டனர். அங்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 41 தொழிலாளர்களுக்கும் உடல் மற்றும் மனநல பரிசோதனை செய்யப்பட உள்ளது. அங்கு 24 மணி நேரம் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பார்கள்.

பிரதமர் மோடி பேச்சு: முன்னதாக நேற்று முன்தினம் இரவு தொழிலாளர்கள் மீட்கப்பட்ட உடனேயே பிரதமர் மோடி வீடியோகாலில் அவர்களுடன் பேசினார்.

பயமே இல்லை, காரணம்?
பிரதமருடன் தொழிலாளர்கள் சிலரும் தங்கள் அனுபவங்களை பகிர்ந்தனர். பீகாரை சேர்ந்த சாபா அகமது என்ற தொழிலாளி பிரதமரிடம் பேசுகையில், ‘‘சுரங்கத்தில் நாங்கள் சிக்கியிருந்த 2 கிமீ பகுதியில் தினமும் காலையில் நடைபயிற்சி செய்தோம். யோகா செய்தோம். இவை மனதைரியத்துடன் இருக்க உதவியது’’ என்றார்.

உத்தரகாண்ட்டை சேர்ந்த கப்பார் சிங் நேகி கூறுகையில், ‘‘உங்களுக்கும், முதல்வர் புஷ்கர் சிங் தாமிக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஒன்றிய குழுவினர், மீட்பு படையினரும் இரவு பகலாக மீட்புப்பணியில் ஈடுபட்டனர். சுரங்கத்தில் எனக்கு எந்த பயமும் ஏற்படவில்லை. ஏனெனில் நீங்கள் பிரதமர் ஆன பிறகு வெளிநாட்டில் சிக்கியவர்களையே பத்திரமாக அழைத்து வந்துள்ளீர்கள், நாங்கள் உள்நாட்டில் தானே இருக்கிறோம். எங்களையும் மீட்பீர்கள் என நம்பினேன்’’ என்றார்.

ஒரு பைசா கூட வாங்கவில்லை
ராக்வெல் எண்டர்பிரைசர்ஸ் எனும் நிறுவனத்தை சேர்ந்த ‘எலி வளை’ வீரர்கள் 12 பேரின் தலைவரான வகீல் ஹசன் கூறுகையில், ‘‘எங்களுக்கு தந்த பணியை 24 அல்லது 36 மணி நேரத்தில் முடித்து தருவதாக கூறினோம். அதே போல, திங்கட்கிழமை மதியம் 3 மணிக்கு வேலையை தொடங்கி செவ்வாய் கிழமை மாலை 6 மணிக்கு முடித்து தந்தோம். இந்த மீட்பு பணியில் உதவுமாறு ஒரு நிறுவனம் எங்களை அணுகியது. மீட்பு பணிக்காக நாங்கள் ஒரு பைசா கூட சம்பளமாக வாங்கவில்லை’’ என்றார்.

தோளில் தூக்கி வைத்து எங்களை கொண்டாடினர்
தொழிலாளர்களை மீட்க 60 மீட்டர் தூரத்திற்கு சுரங்க இடிபாடுகளை துளையிட வேண்டியிருந்தது. இதில் 48 மீட்டர் வரை துளையிட்ட அமெரிக்காவின் ஆகர் இயந்திரம் பிளேடு உடைந்து தனது பணியை நிறுத்தியது. இதன்பின் கடைசி நேரத்தில் கைகொடுத்தது எலி வளை சுரங்க தொழில்நுட்ப நிபுணர்கள்தான். இவர்கள் 12 பேர் குழு தான் 41 தொழிலாளர்களை மீட்டு ஹீரோக்களாகி உள்ளனர். அவர்களில் டெல்லியை சேர்ந்த குரேஷி, உபியை சேர்ந்த குமார் கூறுகையில், ‘‘நாங்கள் கடைசி கட்ட இடிபாடுகளை அகற்றியதும் தொழிலாளர்கள் இருந்த பகுதியில் சென்று விழுந்தோம். எங்களை பார்த்ததும் அவர்கள் சந்தோஷத்தில் கட்டிப்பிடித்து நன்றி கூறினர். எங்களை தோளில் தூக்கி வைத்து கொண்டாடினர். எங்களுக்கு பாதாம் பருப்பை சாப்பிட தந்தனர்’’ என்றனர்.

* குஜராத்தை சேர்ந்த கோல்டி சோலார் நிறுவனம் மீட்கப்பட்ட 41 தொழிலாளர்களின் வீடுகளுக்கும் இலவசமாக சோலார் பேனல் அமைத்து தருவதாக அறிவித்துள்ளது.
* சுரங்கத்தில் சிக்கிய முதல் 10 நாட்களுக்கு அங்குள்ள பாறை இடுக்கில் வழிந்த தண்ணீரை நக்கி குடித்தும், பொறியை சாப்பிட்டும் உயிர் வாழ்ந்ததாக மீட்கப்பட்ட ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 22 வயதான தொழிலாளர் அனில் பீடியா கூறி உள்ளார்.
8 மீட்கப்பட்ட தொழிலாளர்களின் குடும்பத்தினர் அவர்களின் சொந்த கிராமங்களில் பட்டாசு வெடித்து உண்மையான தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்தனர்.

இனியாவது ஆய்வு பண்ணுங்க: காங்.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது டிவிட்டர் பதிவில், ‘‘உத்தரகாண்ட் சுரங்கத்தில் இருந்து மீட்கப்பட்ட தொழிலாளர்களை வாழ்த்துகிறோம், மீட்புக் குழுவினரை பாராட்டுகிறோம். ஆனால் சுரங்கப்பாதை இடிந்ததில் மிகப்பெரிய கேள்விகள் எழுந்துள்ளன. எனவே இனியாவது அரசு விழித்துக் கொள்ள வேண்டும். இமயமலைப் பிராந்தியத்தில் நடக்கும் அனைத்து உள்கட்டமைப்பு திட்டங்களையும் தற்காலிகமாக நிறுத்தி, புவியியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்’’ என கூறி உள்ளார்.

சுரங்கப்பாதை திட்டம் தொடரும்
மீட்புப் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் கூறுகையில், ‘‘இனி சில்க்யாரா சுரங்கப்பாதையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்யப்படும். அதன் உடைந்த பகுதிகள் சரி செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும். தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு, இந்த சுரங்கப்பாதை திட்டம் இனியும் தொடரும்’’ என்றனர்.

The post உத்தரகாண்ட் சுரங்கத்தில் இருந்து மீட்கப்பட்ட 41 தொழிலாளர்களுக்கு எய்ம்சில் பரிசோதனை: ஹெலிகாப்டரில் ரிஷிகேஷ் அழைத்துச் செல்லப்பட்டனர்; பிரதமர் மோடி வீடியோகாலில் பேசி வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: