5 மாநில தேர்தலில் அதிக பரபரப்பை ஏற்படுத்திய தெலங்கானாவில் இன்று வாக்குப்பதிவு: 119 தொகுதிகளில் 35,655 வாக்குச்சாவடி தயார்; டிசம்பர் 3ல் முடிவுகள் வெளியாகிறது

திருமலை: ஐந்து மாநில தேர்தலில் அதிக பரபரப்பை ஏற்படுத்திய தெலங்கானாவில் இன்று 119 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதற்காக 35,655 வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவையொட்டி 50 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

5 மாநில தேர்தலில் மிசோரம், சட்டீஸ்கர், மத்தியபிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடந்து முடிந்து விட்டது. இறுதியாக தெலங்கானா மாநிலத்தில் உள்ள 119 சட்டமன்ற தொகுதிகளில் ஒரே கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. காங்கிரஸ் மற்றும் பா.ஜ நேரடி மோதலில் ஈடுபட்ட சட்டீஸ்கர், மபி, ராஜஸ்தான் தேர்தலை விட தெலங்கானா தேர்தல் தான் நாடு முழுவதும் அதிக பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தெலங்கானாவில் பிஆர்எஸ் கட்சி ஆட்சி நடக்கிறது. சந்திரசேகர ராவ் முதல்வராக உள்ளார். தெலங்கானா மாநிலம் தனியாக பிரிக்கப்பட்ட பின்னர் நடந்த 2 சட்டப்பேரவை தேர்தலிலும் பிஆர்எஸ் கட்சி தான் வெற்றி பெற்றுள்ளது. 3

வது முறையாக வென்று சாதிக்க சந்திரசேகரராவ் தீவிரமாக உள்ளார். ஆனால் காங்கிரஸ், பா.ஜ இந்த முறை பிஆர்எஸ் கட்சிக்கு கடும் போட்டியை அளித்துள்ளன. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, உபி முதல்வர் யோகி மற்றும் ஒன்றிய அமைச்சர்கள், பா.ஜ தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்பட அனைத்து மாநில பா.ஜ தலைவர்களும் அங்கு குவிக்கப்பட்டனர். அவர்கள் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டனர். காங்கிரஸ் தரப்பில் தேசிய தலைவர் கார்கே மற்றும் ராகுல், பிரியங்கா உள்ளிட்டோரும் கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணைமுதல்வர் டிகே சிவகுமாரும் அங்கு தீவிரமாக பணியாற்றினார்கள். இதனால் நாடு முழுவதும் தெலங்கானா தேர்தல் அதிக பரபரப்பை ஏற்படுத்தியது.

தெலங்கானாவில் உள்ள 119 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு முக்கிய கட்சிகளான பி.ஆர்.எஸ்., காங்கிரஸ், பாஜக, எம்.ஐ.எம், சி.பி.எம்., பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகளும் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என 2,290 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர். அவர்களில் பெண்கள் 221, ஆண்கள் 2,068, திருநங்கை ஒருவர் போட்டியில் உள்ளார். மாநிலத்தில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 3 கோடியே 26 லட்சத்து 1,799. இதில் ஆண் வாக்காளர்கள் 1 கோடியே 62 லட்சத்து 98 ஆயிரத்து 418. பெண் வாக்காளர்கள் 1 கோடியே 63 லட்சத்து 705 பேர். திருநங்கைகளின் எண்ணிக்கை 2,676 ஆவர். தேர்தலுக்காக 35 ஆயிரத்து 655 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. 50 ஆயிரம் போலீசாரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

ரூ.737 கோடி பணம், நகைகள் பறிமுதல்
தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து இதுவரை போலீசார் மற்றும் பறக்குபடை அதிகாரிகள் இதுவரை ₹301 கோடி பணம், ரூ.186 கோடி மதிப்புள்ள வைரம், தங்கம், வெள்ளி பொருட்கள் ₹124 கோடி மதிப்புள்ள மதுபானங்கள், ரூ.83 கோடி சேலை, குக்கர், உள்ளிட்ட பரிசு பொருட்கள் என மொத்தம் ₹737 கோடி மதிப்புள்ளவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2018 தேர்தலில் ₹103 கோடி மதிப்புள்ள நகை, பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் இந்த தேர்தலில் அதிகளவு நகை, பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் உரிய ஆவணங்களை காண்பித்து நகை, பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு நேரம்
தெலங்கானாவில் இன்று நடைபெறும் சட்டமன்ற தேர்தலையொட்டி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். மேலும், மாவோயிஸ்டுகள் தாக்கம் உள்ள 13 தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே வாக்குப்பதிவு நடைபெறும். மீதமுள்ள 106 தொகுதிகளில் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.

3 போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட்
ஐதராபாத் முஷீராபாத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ. ஒருவருக்கு சொந்தமான பணத்தை பட்டுவாடா செய்வதற்காக காரில் கொண்டு செல்லப்பட்டது. இந்த விசாரணையை தவறாக வழிநடத்தவும் காவல்துறை அதிகாரிகள் முயற்சிப்பதாக தேர்தல் கமிஷனில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து ஐதராபாத் மத்திய மண்டல துணை போலீஸ் கமிஷனர் எம்.வெங்கடேஸ்வரலு, சிக்கப்டப்பள்ளி உதவி கமிஷனர் ஏ.யாதகிரி, முஷீராபாத் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜஹாங்கீர் யாதவ் ஆகியோரை சஸ்பெண்ட் செய்துதேர்தல் கமிஷன் நேற்று உத்தரவிட்டது.

The post 5 மாநில தேர்தலில் அதிக பரபரப்பை ஏற்படுத்திய தெலங்கானாவில் இன்று வாக்குப்பதிவு: 119 தொகுதிகளில் 35,655 வாக்குச்சாவடி தயார்; டிசம்பர் 3ல் முடிவுகள் வெளியாகிறது appeared first on Dinakaran.

Related Stories: