சென்னை மாவட்ட தொழில் முதலீடுகள் மாநாட்டில் ரூ.5,566.92 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலையில் கையெழுத்தானது

சென்னை: ஜனவரியில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை முன்னிட்டு சென்னை மாவட்ட தொழில் முதலீடுகள் மாநாடு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் சென்னையில் நேற்று நடைபெற்றது. அப்போது அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது: வேளாண்மைக்கு அடுத்தபடியாக மக்களுக்கு அதிக வேலைவாய்ப்பை வழங்குவது குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை. உயர் கல்வியில் முதலிடத்தில் இருக்கும் தமிழகம் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்பை உருவாக்கி தந்திடவும், 2030ல் தமிழ்நாடு ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை அடையவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் ஜனவரி 7, 8 ஆகிய நாட்களில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடைபெற உள்ளது.

திமுக ஆட்சி பொறுப்பேற்று இதுவரை, தொழில் துறையில் வெளிநாடுகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும், 241 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.2 லட்சத்து 97 ஆயிரத்து 196 கோடி முதலீடுகளை ஈர்த்து, 4 லட்சத்து 15 ஆயிரத்து 252 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்திய அளவில், தொழில் துறையில் 14ம் இடத்தில் இருந்த தமிழ்நாடு இன்று 3ம் இடத்திற்கு முன்னேறி உள்ளது. தமிழ்நாட்டை, தொழில் துறையில் இந்தியாவிலேயே முதலிடத்திற்கு கொண்டு வர நடத்தப்பட உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் தொழில் துறைக்கும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன துறைக்கும் தொழில் முதலீடுகளை ஈர்க்க முதல்வர் இலக்கு நிர்ணயித்துள்ளார். இதற்காக தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும், தொழில் முதலீடு மாநாடுகள் நடத்தப்படுகிறது.

சென்னை மாவட்டத்திற்கு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் வாயிலாக, ரூ.4 ஆயிரத்து 368 கோடி முதலீடுகளை ஈர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இலக்கிற்கும் அதிகமாக 293 குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூலம் ரூ.5 ஆயிரத்து 566 கோடியே 92 லட்சம் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு இன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ரூ.1 கோடியே 10 லட்சத்திற்கான மானியங்களை தொழில்முனைவோர்களுக்கு வழங்கினார். தென்சென்னை எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன், சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன துறை செயலாளர் அர்ச்சனா பட்நாயக், தொழில் வணிக ஆணையர் நிர்மல்ராஜ், கூடுதல் ஆணையர் கிரேஸ்பச்சோவ், சென்னை மண்டல இணை இயக்குநர் இளங்கோவன், டான்ஸ்ட்டியா தலைவர் மாரியப்பன் மற்றும் எம்எல்ஏக்கள் பிரபாகர் ராஜா, அசன் மௌலானா, அரவிந்த் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post சென்னை மாவட்ட தொழில் முதலீடுகள் மாநாட்டில் ரூ.5,566.92 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலையில் கையெழுத்தானது appeared first on Dinakaran.

Related Stories: