தொழில் முதலீடுகள் மாநாட்டில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலையில் ரூ. 5,566.92 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து..!!

சென்னை மாவட்ட தொழில் முதலீடுகள் மாநாட்டில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலையில் ரூ. 5,566.92 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. ஜனவரி 2024 நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை முன்னிட்டு நடைபெறும் சென்னை மாவட்ட தொழில் முதலீடுகள் மாநாட்டில், மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் முன்னிலையில் ரூ.5,566.92 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

நிகழ்ச்சியில் அமைச்சர், “வேளாண்மைக்கு அடுத்தபடியாக மக்களுக்கு அதிக வேலைவாய்ப்பை வழங்குவது குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை ஆகும். உயர் கல்வியில் முதலிடத்தில் இருக்கும் தமிழகம் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்பை உருவாக்கி தந்திடவும். 2030-ல் தமிழ்நாடு ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கினை அடையவும் முதல்வர் தலைமையில் வரும் ஜனவரி மாதம் 7, 8 ஆகிய நாட்களில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. மாண்புமிகு முதல்வர் அவர்கள் ஆட்சி பொறுப்பேற்று இது வரை, தொழில் துறையில் வெளிநாடுகளிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும், 241 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.2 லட்சத்து 97 ஆயிரத்து 196 கோடி முதலீடுகளை ஈர்த்து, 4 லட்சத்து 15 ஆயிரத்து 252 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்க வழிவகை செய்துள்ளார்.

முதல்வர் அவர்களின் அயராத உழைப்பினாலும், சீரிய திட்டங்களாலும், இந்திய அளவில், தொழில் துறையில் 14 ஆம் இடத்திலிருந்த தமிழ்நாடு இன்று 3-ஆம் இடத்திற்கு முன்னேறி உள்ளது. தமிழ்நாட்டை, தொழில் துறையில் இந்தியாவிலேயே முதலிடத்திற்கு கொண்டு வர நடத்தப்பட உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் தொழில் துறைக்கும். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன துறைக்கும் தொழில் முதலீடுகளை ஈர்க்க மாண்புமிகு முதல்வர் அவர்கள் இலக்கு நிர்ணயித்து ஆணையிட்டுள்ளார்கள். தொழில் முதலீடுகளை ஈர்க்கும் விதமாக, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும், தொழில் முதலீடு மாநாடுகள் நடத்தப்படுகிறது.

சென்னை மாவட்டத்திற்கு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் வாயிலாக, ரூ.4 ஆயிரத்து 368 கோடி முதலீடுகளை ஈர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கிற்கும் அதிகமாக 293 குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூலம் ரூ.5 ஆயிரத்து 566 கோடியே 92 லட்சம் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு இன்று நம் முன்னியிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு உள்ளது. இதன் மூலம், நமது மாவட்டத்தில், வாகன உதிரி பாகங்கள் தயாரிப்பு, விண்வெளி மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் எலக்ட்ரானிக் சாதனங்கள் தகவல் தொழிலநுட்ப சாதனங்கள் வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் தொடங்கப்பட உள்ளது.

இதன் மூலம் 26 ஆயிரத்து 447 நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். தொழில் முனைவோர்கள் தொழில் தொடங்குவதற்கான உரிமங்களை விரைந்து பெறுவதற்கு Single widow 2.ஓ மூலம் அரசு துறைகள் வழங்கும் 163 வகையான சேவைகளை இணைய வழியில் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த சேவையின் மூலம், இதுவரை, 26 ஆயிரத்து 180 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 24 ஆயிரத்து 117 தொழில்முனைவோருக்கு உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளது. இன்று புரிந்துணர்வு போடப்பட்டுள்ள நிறுவனங்களுக்கும். இத்திட்டத்தின் மூலம் அனுமதிகள் விரைந்து வழங்கப்படும் என தெரிவித்துக் கொள்கிறேன்.

தொழில்முனைவோருக்காக சென்னைக்கு அருகில் ஒரகடம், திருப்பெரும்புதூர், வல்லம் வடகால் பிள்ளைப் பாக்கம் இருங்காட்டுக் கோட்டை ஆகிய சிப்காட் தொழில் பேட்டைகளும், கிண்டி, அம்பத்தூர். திருமுடிவாக்கம், திருமழிசை ஆகிய சிட்கோ தொழிற்பேட்டைகளும் உள்ளது. மாண்புமிகு முதல்வர் அவர்கள் குறு. சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக 5 வகையான சுயதொழில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். ஆட்சி பொறுப்பேற்று, இதுவரை ரூ. 1,099 கோடியே 86 லட்சம் மானியத்துடன் ரூ.3 ஆயிரத்து 890 கோடியே 59 லட்சம் வங்கி கடனுதவி வழங்கப்பட்டு 30 ஆயிரத்து 981 படித்த இளைஞர்கள் புதிய தொழில் முனைவோர்களாக உருவாக்கப்பட்டுள்ளனர் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

ரூ. 126 கோடியே 84 லட்சம் மானியத்துடன் ரூ. 256 கோடியே 7 லட்சம் வங்கி கடனுதவி வழங்கப்பட்டு 1065 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் புதிய தொழில் முனைவோர்களாக உருவாக்கப்பட்டுள்ளனர். சென்னை மாவட்டத்தில் மட்டும் ரூ.53 கோடியே 94 லட்சம் மானியத்துடன் ரூ.175 கோடியே 7 லட்சம் வங்கி கடனுதவி வழங்கப்பட்டு 1,622 படித்த இளைஞர்கள் புதிய தொழில் முனைவோர்களாக உருவாக்கப்பட்டுள்ளனர் இதில் 1.014 மகளிர் 367 பட்டியல் இனத்தவர். பழங்குடியினர் 72 சிறுபான்மையினர் 22 மாற்றுத்திறனாளிகள் தொழில் முனைவோராக உருவாக்கப்பட்டுள்ளனர் என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழகத்தின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக, மாண்புமிகு முதல்வர் அவர்கள் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் இந்தியாவிலேயே முதன் முறையாக சொத்து பிணையில்லா கடன் பெற தமிழ்நாடு கடன் உத்தரவாத திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், இதுவரை, 25 ஆயிரத்து 348 தொழில் முனைவோர்களுக்கு ரூ.3 ஆயிரத்து 177 கோடி 72லட்சம் வங்கி கடன் உதவிக்கு m. 410 கோடியே 78 லட்சம் கடன் உத்தரவாதத்தை அரசு அளித்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தங்கள் விலை பட்டியல்களை வங்கிகளில் வைத்து விரைவாக கடன் பெற தமிழ்நாடு வர்த்தக வரவுகள் மற்றும் தள்ளுபடி தளம் – Tamil Nadu-TReDS ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் 6,900 விலைப்பட்டியல்களுக்கு, ரூ.ஆயிரத்து 289 கோடியே 22 லட்சம் வங்கி கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், பெருந்தொழில் நிறுவனங்களுக்கு வழங்கிய பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு உரிய தொகையை பெறுவதில் ஏற்படும் காலதாமத்திற்கு தீர்வு காண சென்னை, திருச்சி, மதுரை. கோயம்புத்தூர் ஆகிய 4 மண்டலங்களில் வசதியாக்க மன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளது. கழக அரசு பொறுப்பேற்ற பிறகு இம்மன்றங்கள் மூலம் 542 நிறுவனங்களுக்கு ரூ.95 கோடி 62 லட்சம் பெற்று வழங்கப்பட்டுள்ளது.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன தொழில்களின் வளர்ச்சிக்காகமாண்புமிகு முதல்வர் அவர்களால் ரூ.324 கோடியே 66 லட்சம் மதிப்பீட்டில், 519 ஏக்கர் பரப்பளவில் 8 தொழிற்பேட்டைகள் புதிதாக துவக்கப்பட்டுள்ளது. 325.64 ஏக்கர் பரப்பளவில் 8 புதிய தொழிற்பேட்டைகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் நில வழிகாட்டி மதிப்பு தொடர்ந்து உயர்த்தப்பட்டது. தொழில்மனைகளின் விலை உயர்ந்ததன் காரணமாக தொழில்மனைகள் ஒதுக்கீடு செய்யப்படாமல் இருந்தது. சிட்கோ வரலாற்றிலேயே முதல் முறையாக தொழில்மனை விலையை மாண்புமிகு முதல்வர் அவர்கள் 5% முதல் 75% வரை குறைத்து உத்தரவிட்டார்கள் கழக அரசு பொறுப்பேற்று இதுவரை, 1.356 தொழில் மனைகள் தொழில் முனைவோர்க்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு அந்த மனைகளில் தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

அரசு புறம்போக்கு நில வகைப்பாட்டில் உள்ள 60 சிட்கோ தொழிற்பேட்டைகளின் 3,702 ஏக்கர் நிலத்திற்கு பட்டா வழங்க வேண்டுமென தொழில்முனைவோர்களின் நீண்டநாள் கோரிக்கையை, தாயுள்ளத்துடன் பரிசீலித்த நமது மாண்புமிகு முதல்வர் அவர்கள், முதல் கட்டமாக 32 தொழிற்பேட்டைகளில் உள்ள 1,547 ஏக்கருக்கு பட்டா வழங்க ஆணையிட்டு,கடந்த 28.3.2023 அன்று தனது திருக்கரங்களால் பட்டாவழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்கள். இதுவரை, 216 தொழில் முனைவோர்களுக்கு தொழில்மனை பட்டா வழங்கப்பட்டு உள்ளது. குறுந்தொழில் நிறுவனங்களின் மூலதன செலவை குறைக்கவும், உடனடியாக தொழில் தொடங்கவும், கிண்டி, அம்பத்தூர். சேலம் ஆகிய இடங்களில், ரூ.175 கோடியே 18 லட்சம் மதிப்பீட்டில் 264 தொழில் கூடங்கள் கொண்ட புதிய அடுக்குமாடி தொழில் வளாகங்கள் விரைவில் முதல்வர் அவர்களால் திறந்து வைக்கப்பட உள்ளன.

மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்தவும், அவற்றை வர்த்தக ரீதியாக தயாரிக்கவும். மாண்புமிகு முதல்வர் அவர்கள் Start-Up -TN என்ற இயக்கத்தை துவக்கி, அதற்கான நிதியினை ஒதுக்கி புதிய திட்டங்களை அறிவித்து. செயல்படுத்தி வருகிறார். முதல்வர் அவர்களின் முன் மாதிரியான திட்டங்களால், Start-Up தர வரிசையில் இந்திய அளவில் கடைசி இடத்திலிருந்த தமிழ்நாடு. 3-ஆம் நிலைக்கு முன்னேறி “லீடர்” தகுதியை பெற்றுள்ளது. புத்தொழில் முனைவோர்களுக்கு ஆதார நிதி வழங்கும் (TANSEED) திட்டத்தின் கீழ்கழக அரசு பொறுப்பேற்று இதுவரை 21 SC/ST தொழில்முனைவோர்க்கு ரூ.28 கோடியே 10 லட்சம் நிதி உதவியுடன், 153 ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ரூ.42 கோடியே 5 லட்சம் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துக் கொள்கிறேன்.

புத்தாக்க சிந்தனைக் கொண்ட நம் இளைஞர்களையும், மாணவர்களையும் ஊக்கப்படுத்திட தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம்பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் ஆட்சி பொறுப்பேற்று, இது வரை 8 லட்சத்து 98 ஆயிரத்து 812 இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு தொழில் முனைவோர் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது என்பதை பெருமையுடன் தெரிவித்து கொள்கிறேன். கடந்த 2 ஆண்டுகளில், 266 புதிய கண்டுப்பிடிப்பாளர்களுக்கு ரூ.7 கோடியே 39 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. மாண்புமிகு முதல்வர் அவர்களின் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கினை அடைவதற்காக, நடைபெற உள்ள, உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை தொழில்முனைவோர்கள் நல்ல முறையில் பயன்படுத்தி, தமிழ்நாட்டை தொழில் துறையில் முதன்மை மாநிலமாக கொண்டு வர பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்”.

நிகழ்ச்சியில் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் ரூ.1 கோடியே 10 லட்சத்திற்கான மானியங்கள் தொழில்முனைவோர்களுக்கு வழங்கினார். தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி தமிழச்சி தங்கப்பாண்டியன், சென்னை மாவட்ட ஆட்சியர் திருமதி ரஷ்மி சித்தார்த் ஜகடே, இ.ஆ.ப., குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன துறை. அரசு செயலர் திருமதி அர்ச்சனா பட்நாயக் இ.ஆ.ப., தொழில் வணிக ஆணையர் திரு.நிர்மல்ராஜ், இ.ஆ.ப., கூடுதல் ஆணையர் திருமதி கிரேஸ்பச்சோவ் இ.ஆ.ப. சென்னை மண்டல இணை இயக்குநர் திரு.இளங்கோவன், டான்ஸ்ட்டியா தலைவர் திரு.மாரியப்பன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.பிரபாகர் ராஜா, திரு.அசன் மௌலான, திரு.அரவிந்த் ரமேஷ் கலந்து கொண்டனர்.

The post தொழில் முதலீடுகள் மாநாட்டில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலையில் ரூ. 5,566.92 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து..!! appeared first on Dinakaran.

Related Stories: