போலி ஆவணங்களில் பதிவான பத்திரங்களை விசாரிக்க தடை அதிகாரிகள் தகவல் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட பதிவாளர்களுக்கு

வேலூர், நவ.29: தமிழ்நாடு முழுவதும் போலி ஆவணங்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட பத்திரங்கள் குறித்து விசாரிக்க மாவட்ட பதிவாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் மோசடி, போலி, பத்திரப்பதிவுகளை தடுக்கும் வகையில், கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சட்டப்பேரவையில் மத்திய பதிவுச்சட்டத்தில் தமிழக அளவில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம், பதிவாளரே போலிபதிவுகள் குறித்து ஆய்வு செய்து அவற்றை ரத்து செய்ய முடியும். இந்த சட்ட மசோதா சட்டப்பேரவையில் அறிமுகம் செய்யப்பட்ட அன்றே ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆளுநர் ஒப்புதல் அளித்தநிலையில், மத்திய சட்டத்தில் திருத்தம் என்பதால், குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. பின்னர் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்தார். இதையடுத்து, தமிழகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 28ம் தேதி போலி பத்திர பதிவை ரத்து செய்யும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதைதொடர்ந்து, தமிழகத்தில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகங்களில் போலி ஆவணங்கள் மூலம் பதிவு செய்யப்பட்டதாக புகார்கள் குவிந்தன. அந்த புகார்கள் மீது விசாரணை நடத்தி, போலி ஆவணங்கள் மூலம் பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தால், அந்த பத்திரங்களை ரத்து செய்ய மாவட்ட பதிவாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி, வேலூர் பதிவு மண்டலத்தில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, செய்யாறு ஆகிய 5 பதிவு மாவட்டங்களில் 45 சார் பதிவாளர்கள் அலுவலகங்கள் உள்ளன. வேலூர் பதிவு மண்டலத்தில் சுமார் 130க்கும் மேற்பட்ட போலி ஆவணங்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட பத்திரங்களை அதிகாரிகள் ரத்து செய்தனர். இந்நிலையில், போலி ஆவணங்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட பத்திரங்களை ரத்து செய்ய கோரி வரும் மனுக்கள் மீது விசாரணை நடத்த தடை விதித்து பதிவுத்துறை அதிகாரிகள் உத்தரவு வந்துள்ளது.

இதுகுறித்து பதிவுத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘மோசடி பத்திரங்களை ரத்து செய்வதற்காக, பதிவு சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள, ‘77ஏ’ என்ற பிரிவை, முன் தேதியிட்டு அமல்படுத்தலாமா என்பது உள்ளிட்ட சில கேள்விகள், உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, மூன்று பேர் கொண்ட அமர்வில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு வரும் வரை, போலி ஆவணங்கள் பதிவு செய்யப்பட்ட பத்திரங்களை ரத்து செய்யக்கோரி வரும் மனுக்கள் மீது விசாரணை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது’ என்றனர்.

The post போலி ஆவணங்களில் பதிவான பத்திரங்களை விசாரிக்க தடை அதிகாரிகள் தகவல் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட பதிவாளர்களுக்கு appeared first on Dinakaran.

Related Stories: