தொழிலாளியை அடித்துக்கொன்ற 2 பேருக்கு ஆயுள் தண்டனை ஆரணி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வந்தவாசி அருகே மதுபோதை தகராறில்

ஆரணி, நவ.29: வந்தவாசி அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் மரம் வெட்டும் தொழிலாளியை அடித்துக்கொன்ற 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து, ஆரணி நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த மேல்பாதிரி கிராமம் இருளர் குடியிருப்பை சேர்ந்தவர் குமார்(35), மரம் வெட்டும் தொழிலாளி. இவரது மனைவி விஜயா. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்நிலையில், வந்தவாசி அடுத்த பொன்னூர் கிராமம், இருளர் குடியிருப்பில் உள்ள கன்னிமார் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கூழ்வார்க்கும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, 15.04.2012 அன்று நடந்த கூழ்வார்க்கும் திருவிழாவிற்கு குமார் தனது குடும்பத்துடன் சென்றார். அப்போது, வந்தவாசி அடுத்த சென்னாவரம் இருளர் குடியிருப்பை சேர்ந்த துரை(28), மாரி(21) என்பவர்களும் கூழ்வார்க்கும் திருவிழாவிற்கு வந்தனர்.

பின்னர், கோயில் திருவிழாவில் குமார், மாரி, துரை மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்தனர். சிறிது நேரத்தில் மாரி, துரை ஆகிய இருவரும் மதுபோதையில் குமாரை அசிங்கமாக பேசி தகராறு செய்துள்ளனர். தொடர்ந்து இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த துரை, மாரி ஆகிய இருவரும் சேர்ந்து குமாரை கையால் தாக்கினர். மேலும், அருகில் இருந்த கட்டையை எடுத்து அவரது தலையில் சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார்களாம். இதனால் படுகாயத்துடன் மயங்கி விழுந்த குமாரை அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி குமார் 16.04.2012 அன்று காலை 8 மணி அளவில் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து குமாரின் மனைவி விஜயா பொன்னூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து துரை, மாரி ஆகிய 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இந்த வழக்கு ஆரணியில் உள்ள கூடுதல் மாவட்ட அமர்வு மற்றும் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அதன்படி, நேற்று இந்த வழக்கு விசாரணை மாவட்ட அமர்வு நீதிபதி கே.விஜயா முன்னிலையில் நடந்தது. அரசு வழக்கறிஞர் கே.ராஜமூர்த்தி வாதிட்டார். இருதரப்புவாதங்களை கேட்ட நீதிபதி, தொழிலாளியை கட்டையால் அடித்து கொலை செய்த குற்றத்திற்காக மாரி, துரை ஆகிய 2 பேருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா ₹2 ஆயிரம் அபராதம் விதித்தார். மேலும், இந்த அபராத தொகையை கட்ட தவறினால் 2 ஆண்டு கடுங்காவல் தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கினார். இதையடுத்து, மாரி, துரை ஆகிய இருவரும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

The post தொழிலாளியை அடித்துக்கொன்ற 2 பேருக்கு ஆயுள் தண்டனை ஆரணி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வந்தவாசி அருகே மதுபோதை தகராறில் appeared first on Dinakaran.

Related Stories: