இஸ்லாமிய பெண் எம்எல்ஏ வந்து சென்றதால் கங்கை நீரால் கோயிலை கழுவிய கிராம மக்கள்

சித்தார்த்நகர்: உத்தரப்பிரதேசத்தில் இஸ்லாமிய பெண் எம்எல்ஏ கோயிலுக்கு வந்து சென்றதால் சிலர் கோயிலை கங்கை நீரால் சுத்தம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப்பிரதேசத்தின் சித்தார்த்நகர் மாவட்டத்தில் பத்ஹானி சாபா நகர் பஞ்சாயத்தில் சாமே மாதாகோயில் அமைந்துள்ளது . இந்த கோயிலில் ஞாயிறன்று நடந்த ஷட்சண்டி மகாயக்ஞம் நிகழ்ச்சிக்கு தூம்கரியாகஞ்ச் எம்எல்ஏவான இஸ்லாமியரான சயீதா காதூனுக்கு உள்ளூர் மக்கள் அழைப்பு விடுத்திருந்தனர்.

இந்த அழைப்பை ஏற்று எம்எல்ஏ கோயிலுக்கு வந்து நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு சென்றார். இதனை தொடர்ந்து அவரது வருகையை விரும்பாத சிலர் கோயிலை மந்திரங்கள் முழங்க கங்கை நீரால் சுத்தம் செய்தனர். பஞ்சாயத்து தலைவர் தர்மராஜ் வர்மா கூறுகையில், “எம்எல்ஏ இஸ்லாமியர், அவர் மாட்டிறைச்சி சாப்பிடுபவர். அவரது வருகை இந்த புனிதமான இடத்தை தூய்மையற்றதாக்கிவிட்டது.

தற்போது தூய்மைபடுத்தப்பட்ட பிறகு இந்த இடம் வழிபாட்டிற்கு ஏற்றதாக மாறியுள்ளது” என்றார். இது குறித்து எம்எல்ஏ சயீதா கூறுகையில், “நான் மக்கள் பிரதிநிதி என்பதால் அனைத்து மதங்கள் மற்றும் பிரிவினரின் இடங்களுக்கு தொடர்ந்து செல்வேன். இதுபோன்ற செயல்களால் எங்களை தடுக்க முடியாது” என்றார்.

The post இஸ்லாமிய பெண் எம்எல்ஏ வந்து சென்றதால் கங்கை நீரால் கோயிலை கழுவிய கிராம மக்கள் appeared first on Dinakaran.

Related Stories: