கொடுங்கையூரில் உள்ள பிரபல உணவகத்தில் பிரியாணி, தந்தூரி சாப்பிட்ட 4 பேருக்கு வாந்தி, மயக்கம்: போலீசார் விசாரணை

பெரம்பூர்: கொடுங்கையூரில் உள்ள பிரபல உணவகத்தில் மட்டன் பிரியாணி, தந்தூரி சிக்கன் சாப்பிட்ட 4 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். வியாசர்பாடி, சர்மா நகர், 11வது தெருவை சேர்ந்தவர் ராம்ஜி (30). இவர், தனது மனைவி ஜீவிதா மற்றும் உறவினர் ஜாக்குலின் ஆகியோருடன், நேற்று முன்தினம் இரவு, கொடுங்கையூர் காவல் நிலையம் எதிரே உள்ள பிலால் தலப்பாகட்டி பிரியாணி கடைக்கு சாப்பிட சென்றார். அங்கு இவர்கள், மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி, தந்தூரி சிக்கன் ஆகியவற்றை ஆர்டர் செய்து சாப்பிட்டுவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில், நேற்று அதிகாலை 4 மணிக்கு ராம்ஜி, ஜீவிதா, ஜாக்குலின் ஆகிய மூவருக்கும் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதையடுத்து, 3 பேரும் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டனர். இதேபோல், கொடுங்கையூர் தென்றல் நகர் 4வது தெருவை சேர்ந்த ரஞ்சித்குமார், தனது மனைவி சைனா பானுவுக்கு (25) நேற்று முன்தினம் இரவு அதே ஓட்டலில் தந்தூரி சிக்கன் வாங்கி தந்துள்ளார். அதை சாப்பிட்டவுடன் சைனா பானுவுக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.

அவரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று, தற்போது ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட 4 பேரின் உறவினர்கள் நேற்று இதுகுறித்து குறிப்பிட்ட உணவகத்திற்கு வந்து, ‘‘ஏன் கெட்டுப்போன உணவு பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்கிறீர்கள்,’’ என கேட்டுள்ளனர். இதற்கு உணவகத்தின் சார்பில் முறையாக பதிலளிக்கவில்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து, ராம்ஜி உள்ளிட்ட 4 பேரும், இதுகுறித்து கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார இதுபற்றி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post கொடுங்கையூரில் உள்ள பிரபல உணவகத்தில் பிரியாணி, தந்தூரி சாப்பிட்ட 4 பேருக்கு வாந்தி, மயக்கம்: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: