மாணவன் சடலம் வாங்க மறுத்து 4வது நாளாக நீடித்த போராட்டம் போலீசார் சமரசம் ஏற்று அடக்கம் செய்யப்பட்டது கே.வி.குப்பம் அருகே தற்கொலை செய்த

கே.வி.குப்பம், நவ.28: கே.வி.குப்பம் அருகே தற்கொலை செய்து கொண்ட மாணவன் சடலம் வாங்க மறுத்து 4வது நாளாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் சமரசத்தை ஏற்று அடக்கம் செய்தனர்.
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த கே.வி.குப்பம் வேளாளர் தெருவை சேர்ந்த செல்வராஜ், உஷா தம்பதியின் இளைய மகன் ஜீவரத்தினம் (14). அதே பகுதியில் தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் இவர் கடந்த 24ம் தேதி வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த கே.வி.குப்பம் போலீசார் மாணவனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மாணவனின் சடலத்தை வாங்க மறுத்த பெற்றோர், கடந்த 25ம் தேதி மகன் சாவில் சந்தேகமிருப்பதாகவும், அவர் படித்த தனியார் பள்ளி நிர்வாகத்தை அழைத்து விசாரணை செய்ய வேண்டும் எனவும், பல்வேறு கட்சிகளை சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்டோருடன் வந்து கே.வி.குப்பம் காவல் நிலையத்தினை முற்றுகையிட்டனர். அன்று மாலை ஆர்பாட்டத்திலும் ஈடுபட்டனர். முன் அறிவிப்பின்றியும், போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 75நபர்கள் மீது கே‌.வி.குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் மாணவன் உடலை வாங்க மாட்டோம், மாணவன் படித்த பள்ளி நிர்வாகத்தின் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என கோரிக்கைகளை முன்வைத்து பாமாக, கம்யூனிஸ்டு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கே.வி.குப்பம் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் தஞ்சம் புகுந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஏடிஎஸ்பி கவுதமன், டிஎஸ்பி பழனி, இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமாரி, பார்த்தசாரதி உள்ளிட்ட சுமார் 50க்கும் மேற்பட்ட போலீசார் காவல் நிலையத்தில் அவர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. தொடர்ந்து 4ம் நாளான நேற்று இச்சம்பவம் தொடர்பாக ஒரு நாள் கடை அடைப்பு போராட்டம் நடத்தபோவதாக வியாபாரிகள் சங்கத்தினர் சார்பில் அறிவித்தனர். அதனைதொடர்ந்து நேற்று காலை கே.வி.குப்பம் சந்தைமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதியில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டன.

இதுகுறித்து தகவல் அறிந்த இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரி, ஒலிப்பெருக்கி மூலம் அனைத்து வியாபாரிகளையும் கடையினை திறக்க வேண்டும் என்று கூறினார். ஆனால் வியாபாரிகள் கடையை திறக்கவில்லை. தொடர்ந்து காலை 11 மணி அளவில் ஏடிஎஸ்பி கவுதமன் மாணவரின் பெற்றோர் தரப்பினரை அழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றி தருவதாக உறுதியளித்தார். இதனை ஏற்ற அவர்கள் வியாபாரிகள் சங்கத்தினரிடம் பேசி கடைகளை மீண்டும் திறக்க வழிசெய்தனர். தொடர்ந்து மாணவனின் சடலத்தை பெற்ற பெற்றோர் இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகளை செய்து மாலை 6 மணியளவில் அடக்கம் செய்தனர்.

The post மாணவன் சடலம் வாங்க மறுத்து 4வது நாளாக நீடித்த போராட்டம் போலீசார் சமரசம் ஏற்று அடக்கம் செய்யப்பட்டது கே.வி.குப்பம் அருகே தற்கொலை செய்த appeared first on Dinakaran.

Related Stories: