காவல்துறை சார்பில் சனிக்கிழமை தோறும் மெரினா கடற்கரையில் இசை நிகழ்ச்சி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் வாரம் தோறும் சனிக்கிழமைகளில் காவல் துறையினரின் இசை நிகழ்ச்சி நடைபெறுவதற்கான தொடக்க விழாவை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். மெரினா கடற்கரை மணல் பரப்பில் விவேகானந்தர் இல்லம் எதிரே காவல்துறை இசைக்குழுவினர் இசை நிகழ்ச்சி துவக்க விழா நேற்று நடைபெற்றது. இதனை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நிகழ்வில், தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உட்பட காவல்துறையை சேர்ந்த உயர் அதிகாரிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். மேலும் வாரத்தில் ஒவ்வொரு சனிக்கிழமை மாலை 5 மணி முதல் 6 மணி வரையில் இசைக்குழுவினர் இசை நிகழ்ச்சி நடைபெறும் என்று காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் பேசுகையில், ‘‘காவல் துறையின் இசைக்குழு இசையினை பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில் வாரம்தோறும் சனிக்கிழமை மெரினா கடற்கரையில் இசை நிகழ்ச்சி நடைபெறும். எந்த ஒரு மாநிலத்திலும் காவல் துறை இதுபோன்ற நிகழ்வுகளை முன்னெடுத்ததில்லை. ஆனால் தமிழ்நாடு காவல் துறை சார்பில் இந்த நிகழ்வு தற்போது சென்னை காவல் துறை சார்பில் முன்னெடுத்து நடைபெறவுள்ளது. காவல் துறையிடம் கோரிக்கை வைக்கும் வண்ணம் பொருட்டு தனியார் நிகழ்வுகளிலும் காவல் துறையின் இசை நிகழ்ச்சி நடத்துவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட உள்ளது,’’ என்றார்.

சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் பேசுகையில், ‘‘தமிழ்நாடு காவல்துறைக்கு பல்வேறு சிறப்புகள் உள்ளது. இந்த சிறப்புகளில் மேலும் சிறப்பு சேர்க்கக்கூடிய இந்த நிகழ்வினை சென்னை காவல் துறை சார்பில் இணைந்து நடத்துவது மிகவும் பெருமைக்குரிய ஒன்றாகும்,’’ என்றார்.

மாநகராட்சி ஆணையர் ராதா கிருஷ்ணன் பேசுகையில், ‘‘உலக கோப்பை போட்டியின் போது விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒரு திட்டத்தினை முன்னெடுத்தார். குறிப்பாக விளையாட்டுப் போட்டிகளை மெரினா கடற்கரை உட்பட பெசன்ட் நகர் கடற்கரைகளில் ஒளிபரப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக அந்த திட்டம் இருந்தது. தமிழ்நாடு காவல்துறை என்பது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒரு துறை அதனை பெருமைப்படுத்தக் கூடிய வகையில் அவர்களது இசைக்குழுவினை பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில் பொதுவெளியில் இசைப்பதற்கு நிகழ்ச்சி நடப்பது மிகவும் பெருமை தக்க ஒன்று,’’ என்றார்.

The post காவல்துறை சார்பில் சனிக்கிழமை தோறும் மெரினா கடற்கரையில் இசை நிகழ்ச்சி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: