மேட்டுப்பாளையத்தில் கனமழை காரணமாக 12 வீடுகள் இடிந்து சேதம்: தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது

*மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தல்

மேட்டுப்பாளையம் : கனமழை காரணமாக மேட்டுப்பாளையம் தாலுகாவில் ஒரே நாளில் 12 வீடுகள் இடிந்து சேதமானது.கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான காரமடை, சிறுமுகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த 22ம் தேதி இரவு முதல் நேற்று முன்தினம் வரை கனமழை கொட்டி தீர்த்தது.

இதன் காரணமாக, மேட்டுப்பாளையம் தாலுகாவில் உள்ள சிக்காரம்பாளையம் ஊராட்சியில் 4 வீடுகள், சிக்கதாசம்பாளையம் ஊராட்சியில் 4 வீடுகள், காரமடை பகுதியில் 3 வீடுகள், பெள்ளாதி ஊராட்சியில் ஒரு வீடு என மொத்தம் 12 வீடுகள் பகுதியாக இடிந்து சேதம் அடைந்துள்ளன. மேலும், மேட்டுப்பாளையம் நகர பகுதிகளில் 33வது வார்டுக்குட்பட்ட குமரபுரம் பகுதியில் பயன்படுத்தப்படாத வீடு ஒன்று இடிந்து அருகில் இருந்த அம்சவேணி (43) என்பவரது வீட்டின் மேற்கூரையில் விழுந்தது. இதில், யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.

இதையறிந்த மேட்டுப்பாளையம் தாசில்தார் சந்திரன் மற்றும் வருவாய்த்துறையினர் கிராம நிர்வாக அலுவலர்களுடன் பாதிக்கப்பட்ட பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.சேதமடைந்த வீடுகள் மற்றும் வெள்ள பாதிப்புகளை மேட்டுப்பாளையம் நகர் மன்ற தலைவர் மெஹரீபா பர்வீன் அஷ்ரப் அலி உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.

இதுகுறித்து மேட்டுப்பாளையம் தாசில்தார் சந்திரன் கூறுகையில்,“தொடர் கனமழை காரணமாக மேட்டுப்பாளையம் தாலுகாவில் மொத்தமாக நேற்று முன்தினம் ஒரே நாளில் 12 வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளன. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், பழைய கட்டிடங்கள் அல்லது சேதமடைந்த கட்டிடங்கள் அருகில் பொது மக்கள் நிற்க கூடாது. மேலும், நீர்நிலைகளில் செல்பி எடுப்பது, குளிப்பது, துணி துவைப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடக்கூடாது’’ என்றார்.

The post மேட்டுப்பாளையத்தில் கனமழை காரணமாக 12 வீடுகள் இடிந்து சேதம்: தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது appeared first on Dinakaran.

Related Stories: