பாரம்பரிய குதிரை சந்தை தொடங்கியது 3 நாட்கள் நடக்கிறது திருவண்ணாமலை தீபத்திருவிழா

திருவண்ணாமலை, நவ.25: திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, பாரம்பரியமான குதிரை சந்தை நேற்று தொடங்கியது. தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறும் இச்சந்தையில் விற்பனைக்காக குதிரைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற தீபத்திருவிழாவின் முக்கிய அம்சமாக, பாரம்பரிய குதிரை சந்தை ஆண்டுதோறும் நடப்பது வழக்கம். அதன்படி, தீபத்திருவிழா உற்சவத்தின் 8ம் நாளான நேற்று வழக்கமான உற்சாகத்துடன் குதிரை சந்தை தொடங்கியது. அதன்படி, கிரிவலப்பாதையில் உள்ள அரசு கலைக் கல்லூரி அருகில் உள்ள சந்தைத்திடலில், குதிரை சந்தை களைகட்டியது. ஈரோடு, புதுக்கோட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து விற்பனைக்காக குதிரைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. வெளி மாநில குதிரைகள் இன்று விற்பனைக்கு வரும் என தெரிகிறது.

ரேக்ளா ரேஸ் பந்தயத்துக்கு பயன்படுத்தப்படும் குதிரைகள், அதிகபட்சமாக ₹2 லட்சம் வரை விலை போகும் என வியாபாரிகள் தரப்பில் தெரிவித்தனர். மேலும், குதிரை வண்டிகளின் பயன்பாடு குறைந்தபோதும், குதிரை வளர்ப்பில் ஆர்வம் உள்ளவர்கள் குதிரைகளை வாங்குவதற்கு வருவார்கள் என்றனர். அதேபோல், அதே பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கால்நடை சந்தைக்கு, காங்கேயம் காளைகள், ஜவ்வாதுமலை நாட்டு மாடுகள், செவலைக் காளைகள் உள்பட பல்வேறு வகையான நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளன. அதேபோல், குதிரை சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ள குதிரைகளை, பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர். இந்த சந்தை வரும் 27ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குதிரை சந்தை மற்றும் மாட்டுச்சந்தை நடைபெறுவதை முன்னிட்டு, சிறப்பு கால்நடை மருத்துவ முகாமும் அந்த பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

The post பாரம்பரிய குதிரை சந்தை தொடங்கியது 3 நாட்கள் நடக்கிறது திருவண்ணாமலை தீபத்திருவிழா appeared first on Dinakaran.

Related Stories: