காசா: போர் நிறுத்தம் அறிவித்த பிறகும் காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடர்ந்தது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 52 பேர் உள்பட 100 பேர் பலியாகினர். ஹமாஸ்-இஸ்ரேல் இடையே நீடிக்கும் போர் காரணமாக காசாவில் உள்ள பொதுமக்கள் மனிதாபிமான உதவி கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறார்கள். இதற்காக உலக நாடுகள் முயற்சி மேற்கொண்டன. குறிப்பாக அமெரிக்கா உதவியுடன் கத்தார் போர் நிறுத்தம் ஒப்பந்தம் செய்ய மத்தியஸ்தரராக செயல்பட்டு வந்தது. கடந்த 48 நாட்களாக காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் 13 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். காசாவின் மக்கள்தொகையில் முக்கால்வாசி பேர், தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறி நெரிசலான மற்றும் சுகாதாரமற்ற இடங்களில் தங்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
அதோடு காசாவுக்கு உணவு, குடிநீர், எரிவாயு போன்றவற்றின் வினியோகத்தை இஸ்ரேல் நிறுத்திவிட்டதால் பல லட்சம் மக்கள் பரிதவிப்புக்கு ஆளாகியுள்ளனர். மின்சாரம் இல்லாததாலும், உயிர் காக்கும் மருந்துகள் கிடைக்காததாலும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் மருத்துவமனைகள் திணறி வருகின்றன. இப்படி அப்பாவி மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் இந்த போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என உலக நாடுகள் பலவும் இஸ்ரேலை வலியுறுத்தியது. இதை இஸ்ரேல் நிராகரித்தது. அதே வேளையில் பிணை கைதிகளை விடுவிப்பதற்காக குறிப்பிட்ட காலத்துக்கு போரை நிறுத்தி வைக்க தயாராக இருப்பதாக இஸ்ரேல் கூறியது. அதன்படி தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவிப்பதற்காக எகிப்து, கத்தார், அமெரிக்கா ஆகிய நாடுகள் இஸ்ரேல்-ஹமாஸ் இடையே மத்தியஸ்தம் செய்து வந்தன.
இந்நிலையில் பிணை கைதிகளை விடுவிப்பதற்கு ஈடாக காசாவில் 4 நாட்களுக்கு போரை நிறுத்துவதாக இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது. பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தற்காலிக போர் நிறுத்தம் குறித்த முடிவு எடுக்கப்பட்டது. இந்நிலையில் வெள்ளிக்கிழமைக்கு முன் பணயக்கைதிகள் யாரும் விடுவிக்கப்பட மாட்டார்கள் என்று இஸ்ரேல் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்துள்ளார். அதன்படி இன்று காலை 10 மணி முதல் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் வடக்கு காசாவில் மருத்துவமனை மற்றும் அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இதில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில் 52 பேர் ஒரே குடும்பத்தில் வசித்து வந்தனர். இஸ்ரேலிய பாதுகாப்பு படைகள் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளதாக பாலஸ்தீன வெளியுறவு அமைச்சர் ரியாத் அல்-மலிகி தெரிவித்துள்ளார். இப்படிப்பட்ட சூழ்நிலையில், இதுபோன்ற தாக்குதல்களுக்கு பிறகு ஹமாஸ் போர் நிறுத்தத்தை தொடருமா என்ற கேள்வி எழுகிறது. அதே நேரத்தில் இந்த தாக்குதல் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான ஒப்பந்தத்தை பாதிக்குமா? இந்த சம்பவம் அமெரிக்கா உட்பட பல நாடுகளை கவலையடைய செய்துள்ளது.
The post போர் நிறுத்தம் அறிவித்த பிறகும் காசாவில் இஸ்ரேல் தாக்குதல் appeared first on Dinakaran.