நடிகை திரிஷா குறித்து சர்ச்சை பேச்சு: விசாரணைக்கு ஆஜராக அவகாசம் கேட்டு போலீசாருக்கு மன்சூர் அலிகான் கடிதம்..!!

சென்னை: நடிகை திரிஷா குறித்து சர்ச்சையாக பேசிய விவகாரத்தில் நடிகர் மன்சூர் அலிகான் இன்று ஆஜராக போலீசார் சம்மன் அனுப்பிய நிலையில், விசாரணைக்கு ஆஜராக அவகாசம் கேட்டு ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் போலீசாருக்கு மன்சூர் அலிகான் கடிதம் எழுதியுள்ளார். நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் நடிகர் மன்சூர் அலிகான் பேசிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்க வேண்டும் என நடிகர் சங்கம் உள்பட பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர்.

இதுகுறித்து தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து இது தொடர்பாக தமிழக காவல்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என டிஜிபிக்கு அறிவுறுத்தியது. அதன் அடிப்படையில், மன்சூர் அலிகான் மீது ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் போலீஸார் இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து இன்று ( நவம்பர் 23 ) விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியிருந்தனர். இந்நிலையில், விசாரணைக்கு ஆஜராக அவகாசம் கேட்டு ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் போலீசாருக்கு மன்சூர் அலிகான் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், திரைப்பட நடிகை திரிஷா அவர்களை எனது அரசியல் பேட்டியின் இடைய நான் குறிப்பிட, அது குறித்து அவர்கள் கவலை தெரிவிக்க, இந்திய தேசிய மகளிர் ஆணையத்தின் வேண்டுகோளை ஏற்று, தாங்கள் வழக்கு பதிவு செய்து கு.மு.ச.41A பிரிவுப்படி விசாரிக்க என்னை அழைத்தீர்கள். அம்மா எனது குரல்வளை 15 நாட்களாக தொடர் இருமலாக இருந்து நேற்று மிகவும் பாதிப்படைந்து பேச மிகச்சிரமமாக இருப்பதால் நான் மருந்துவ சிகிச்சையில் இருந்து மீண்டு, நாளை தங்களை சந்திக்க, தாங்கள் குறிப்பிடும் நேரத்தில் வர அனுமதிக்குமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

The post நடிகை திரிஷா குறித்து சர்ச்சை பேச்சு: விசாரணைக்கு ஆஜராக அவகாசம் கேட்டு போலீசாருக்கு மன்சூர் அலிகான் கடிதம்..!! appeared first on Dinakaran.

Related Stories: