காவிரி ஒழுங்காற்று குழுவின் 90-வது கூட்டம் அதன் தலைவர் வினித் குப்தா தலைமையில் தொடங்கியது..!!

டெல்லி: காவிரி ஒழுங்காற்று குழுவின் 90-வது கூட்டம் அதன் தலைவர் வினித் குப்தா தலைமையில் தொடங்கியது. காணொலிக் காட்சி மூலம் நடைபெறும் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். கடந்த 3ல் நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழகத்திற்கு வினாடிக்கு 2,600 கனஅடி நீர் திறக்க ஆணை பிறப்பித்தது. நவம்பர் 1 முதல் 23ம் தேதி வரை தமிழகத்திற்கு நீர் திறக்க கர்நாடகாவிற்கு ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இதற்கு கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவித்த போதும், தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்கப்பட்டது.

இதை கண்டித்து மண்டியாவில் கன்னட அமைப்பினரும், விவசாய சங்கத்தினரும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். மேலும், கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார், கர்நாடக அணைகளில் போதிய நீர் இல்லை என்று மறுத்து வருகிறார். இந்நிலையில், ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழகத்திற்கு கர்நாடகம் தண்ணீர் திறந்துள்ளதா? என்பதை கணக்கீடு செய்ய அதன் தலைவர் வினித் குப்தா தலைமையில் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதுபோலவே இரு மாநில அணைகளின் நீர் இருப்பு, நீர் வரத்து, மழைப் பொழிவு உள்ளிட்டவையும் ஆய்வு செய்யப்படும்.

கடந்த முறை குறைந்த அளவே தண்ணீர் திறந்துவிட உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், கூடுதல் தண்ணீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்ய வேண்டுமென தமிழகம் கோரிக்கை வைக்கவுள்ளது. காவிரியில் வினாடிக்கு 13,000 கனஅடி நீர் திறக்க தமிழ்நாடு தரப்பில் வலியுறுத்தப்பட உள்ளது. நிலுவையில் உள்ள 17 டி.எம்.சி. நீரை திறந்துவிட தமிழ்நாடு சார்பில் அதிகாரிகள் வலியுறுத்த உள்ளனர்.

காவிரியில் தண்ணீர் திறந்துவிடுவது தொடர்பாக காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் நடத்தி பரிந்துரை செய்யும். அதை அனைத்து மாநிலங்களும் ஏற்றுக்கொண்டால் எந்த பிரச்னையுமில்லை. ஒரு மாநிலம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் அது காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு செல்லும். ஆணையம் பரிசீலித்து தகுந்த உத்தரவுகளைப் பிறப்பிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

The post காவிரி ஒழுங்காற்று குழுவின் 90-வது கூட்டம் அதன் தலைவர் வினித் குப்தா தலைமையில் தொடங்கியது..!! appeared first on Dinakaran.

Related Stories: