கடலூர்: கடலூரில் தூய்மை பணியாளர்கள் வருகை குறித்து ஆட்சியர் அருண் தம்புராஜ் அதிரடியாக ஆய்வு செய்தார். மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து துப்புரவு பணியாளர்களையும் ஒரே இடத்திற்கு வரவழைத்து ஆய்வு நடத்தினார். கடலூர் நகராட்சியாக இருந்து பெருநகராட்சியாக மாறி தற்போது மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. 45 வார்டுகள் மட்டுமே கொண்ட இந்த கடலூர் மாநகராட்சியை முதன்மை மாநகராட்சியாக கொண்டு வர வேண்டும் என்று கடலூர் மாவட்ட நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே, கடலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் குப்பைகள் அகற்றப்படாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதேபோல் குப்பைகளை வீடு வீடாக சென்று வாங்காததால் பொதுமக்கள் குப்பைகளை வீதியில் வீசி செல்வதாக குற்றம்சாட்டப்பட்டது. கவுன்சிலர்களும் இதுகுறித்து தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்தனர். இந்த நிலையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் இன்று காலை அனைத்து துப்புரவு பணியாளர்களும் கடலூர் மஞ்சள் நகர் மைதானத்திற்கு வர வேண்டும் என உத்தரவிட்டார்.
தூய்மை பணிக்கு பயன்படும் வாகனங்களையும் கொண்டுவர வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் அனைத்து வானங்களும், பணியாளர்களும் வந்திருந்தனர். அச்சமயம், பணியாளர்கள், வாகனங்கள் எண்ணிக்கை குறித்து ஆய்வு மேற்கொண்ட கடலூர் ஆட்சியர், 80 ஊழியர்கள் பணிக்கு வரவில்லை, பாதிக்கும் மேற்பட்ட வாகனங்கள் இல்லை என்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து கேட்டபோது, வாகனங்கள் அனைத்தும் பழுதில் இருப்பதாக ஒப்பந்ததாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இனிவரும் காலங்களில் வீடு வீடாக சென்று குப்பைகளை வாங்குவதை உறுதி செய்ய வேண்டும். நீங்கள் வீடு வீடாக சென்றால் மக்கள் குப்பைகளை கண்டிப்பாக தெருக்களில் கொட்ட மாட்டார்கள் என தூய்மை பணியாளர்களுக்கு ஆட்சியர் அறிவுரை வழங்கினார். மேலும் ஒன்றரை மாதத்தில் அனைத்து பகுதிக்கும் தூய்மை பணியாளர்கள் வருகை தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
தூய்மை பணியாளர்களுக்கு கையுறை வழங்கப்பட வேண்டும். பழுது நீக்கப்பட்டு வாகனங்கள் உடனடியாக வழங்கப்பட்டு தூய்மை பணியில் பணியாளர்கள் ஈடுபடுவதை உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். ஆட்சியரின் அறிவுறுத்தலின் மூலம் இனிவரும் காலங்களில் கடலூர் மாநகராட்சி தூய்மை மாநகராட்சியாக மாறும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
The post கடலூரில் தூய்மை பணியாளர்கள் வருகை குறித்து அதிரடியாக ஆய்வு செய்த ஆட்சியர் அருண் தம்புராஜ்..!! appeared first on Dinakaran.
