மோசடி புகாரில் நமீதா கணவர், பாஜ நிர்வாகிகள் சிக்கிய விவகாரம் எம்எஸ்எம்இ புரமோஷன் கவுன்சிலுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை: ஒன்றிய அமைச்சர் திடீர் விளக்கம்

சேலம்: எம்எஸ்எம்இ புரமோஷன் கவுன்சிலுக்கும் ஒன்றிய அரசுக்கும் சம்பந்தம் இல்லை என்று ஒன்றிய அமைச்சர் விளக்கமளித்தார். எம்எஸ்எம்இ புரமோஷன் கவுன்சில் என்ற அமைப்பின் தலைவரான மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த முத்துராமன், செயலாளரான பஞ்சாப்பை சேர்ந்த துஷ்யந்த் யாதவ் ஆகியோர் இந்த கவுன்சில் ஒன்றிய அரசின் நிறுவனம் என கூறி தேசிய கொடி, அரசின் முத்திரையை பயன்படுத்தி தொழிலதிபர்களிடம் கடன் பெற்றுத்தருவதாக வசூலில் ஈடுபட்டனர். இந்த அமைப்பின் தமிழ்நாடு தலைவராக நடிகை நமீதாவின் கணவர் சவுத்ரி இருந்து வந்தார். சேலத்தை சேர்ந்த பைனான்சியர் கோபால்சாமி என்பவர் தன்னிடம் தமிழ்நாடு தலைவர் பதவி தருவதாக ரூ.50 லட்சத்தை வாங்கி ஏமாற்றியதாக புகார் கூறியதையடுத்து, முத்துராமன், துஷ்யந்த் யாதவ் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், அண்ணாமலை நடைபயணத்துக்கு முத்துராமன் ரூ.1.50 கோடி கொடுத்ததாக கோபால்சாமியிடம் கூறிய ஆடியோ வெளியானது.

இதனால் பாஜக நிர்வாகிகளுக்கும் இந்த மோசடியில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதே நேரத்தில் பாஜ ஊடகப்பிரிவு மாநில தலைவர் மஞ்சுநாத்துக்கும் இந்த மோசடிக்கும் பெரும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டதையடுத்து, அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இவருக்கும் நடிகை நமீதாவின் கணவர் சவுத்ரிக்கும் சேலம் போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால் அவர்கள் விசாரணைக்கு இன்னும் வரவில்லை. இந்த மோசடியில் பாஜ நிர்வாகிகளுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்த நிலையில், இதுபற்றி ஒன்றிய அரசு எந்த பதிலையும் தரவில்லை. இதனால் சந்தேகம் வலுத்து வந்தது. இந்த நிலையில் ஒன்றிய சிறு குறு தொழில்துறை அமைச்சர் நாராயண் ரானே விடுத்துள்ள அறிவிப்பில், ‘எம்எஸ்எம்இ புரமோசன் கவுன்சில் என்ற அமைப்பு ஒன்றிய அரசின் அங்கமோ அல்லது அங்கீகாரமோ பெற்றது இல்லை. ஒன்றிய அரசால் அமைக்கப்பட்டது அல்ல. தேசிய சின்னத்தை பயன்படுத்தவும் அனுமதிக்கப்படவில்லை. போலியான, அங்கீகரிக்கப்படாத மற்றும் தவறான எண்ணம் கொண்ட அமைப்புகளிடம் சிக்காமல் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்’ என கூறியுள்ளார்.

 

The post மோசடி புகாரில் நமீதா கணவர், பாஜ நிர்வாகிகள் சிக்கிய விவகாரம் எம்எஸ்எம்இ புரமோஷன் கவுன்சிலுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை: ஒன்றிய அமைச்சர் திடீர் விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: