பெட்டிக் கடை, மளிகை கடைகளில் குட்கா விற்றால் வியாபாரிகள் மீது குண்டர் சட்டம் பாயும்: வங்கி கணக்கு முடக்கம், கடை உரிமம் ரத்து, புளியந்தோப்பு துணை கமிஷனர் எச்சரிக்கை

பெரம்பூர்: தமிழக அரசின் தடையை மீறி, பெட்டி கடை, மளிகை கடைகளில் குட்கா விற்றால் குண்டர் சட்டம் பாயும் எனவும், வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு, கடை உரிமம் ரத்து செய்யப்படும், எனவும், துணை கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் போதைப் பொருட்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும், அடியோடு ஒழிக்கவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னையில் கடந்த சில நாட்களாகவே போதை பொருட்கள் விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து, சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில், சென்னையில் சிறிய பெட்டி கடைகள் மற்றும் மளிகை கடைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து, குட்கா விற்பனையில் ஈடுபடும் கடைக்காரர்களை கைது செய்து, குறிப்பிட்ட அந்த கடைகளுக்கு சீல் வைத்து வருகின்றனர். அதே நேரத்தில், காவல் துறையினரும் முறையாக நடந்து கொள்ள வேண்டும், குட்கா விற்பனையாளர்களுடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது, அவ்வாறு தொடர்பில் இருந்தால் அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என கூடுதல் கமிஷனர் அஸ்ரா கார்க் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இதனையடுத்து சென்னை முழுவதும் பல்வேறு இடங்களில் தொடர்ந்து போலீசார் குட்கா மற்றும் கஞ்சா விற்பனையை தடுக்க பல்வேறு தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். சிறிய அளவில் குட்கா வைத்திருந்தால் கூட அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், புளியந்தோப்பு காவல் மாவட்டம், செம்பியம் சரகத்தில் உள்ள செம்பியம், திரு.வி.க.நகர், வியாசர்பாடி ஆகிய 3 காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த பங்க் கடை உரிமையாளர்கள், மளிகை கடை உரிமையாளர்கள் ஆகியோர் நேற்று பெரம்பூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.

இவர்களுக்கு, குட்கா விற்றால் சம்பந்தப்பட்டவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து புளியந்தோப்பு துணை கமிஷனர் ஈஸ்வரன் தலைமையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், புளியந்தோப்பு துணை கமிஷனர் ஈஸ்வரன் கூறுகையில், ‘முன்பெல்லாம் குட்கா விற்பனையில் ஈடுபட்டால் அவர்கள் மீது சிறிய அபராதம் விதிக்கப்பட்டு, காவல் நிலைய பிணையில் விட்டு விடுவார்கள். ஆனால் தற்போது, நிலைமை மாறிவிட்டது. 5 கிராம் அளவுக்கு குட்கா வைத்திருந்தால் கூட அவர்கள் மீது பிணையில் வர முடியாத அளவிற்கு வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்கள் சிறைக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.

மேலும் குட்கா விற்பனையில் ஈடுபடும் நபர்கள மீது காவல்துறை சார்பில் தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் விளைவாக தொடர்ந்து குட்கா விற்பனையில் ஈடுபடும் நபர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள். மேலும் தற்போது குட்கா விற்பனையில் ஈடுபடும் கடைகள் மூடி சீல் வைக்கப்படுகிறது. மேலும் மாநகராட்சிக்கு எந்த கடைகளில் குட்கா விற்பனை நடைபெறுகிறது என்ற தகவல் அளிக்கப்பட்டு, அந்த கடைகளின் உரிமத்தை ரத்து செய்யவும், அடுத்தடுத்து போலீசார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே வியாபாரிகள் எக்காரணத்தை கொண்டும் குட்கா விற்பனை செய்யக்கூடாது. தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பது சட்டப்படி குற்றம். எனவே இனி எக்காரணத்தை கொண்டும் வியாபாரிகள் குட்கா விற்பனையில் ஈடுபட கூடாது. இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் செம்பியம் உதவி கமிஷனர் செம்பேடு பாபு, இன்ஸ்பெக்டர்கள் ஐயப்பன், அருள்மணிமாறன், அன்பரசு உள்ளிட்ட ஏராளமான போலீசார் கலந்து கொண்டனர்.

* சரித்திர பதிவேடு குற்றவாளி பட்டியலில் சேர்க்கப்படுவர்
குட்கா விற்பனையில் ஈடுபடும் நபர்களுடன் தொடர்பில் உள்ள அவரது உறவினர்கள் மற்றும் அவர்களோடு தொடர்பில் உள்ளவர்களின் வீடுகளிலும் சோதனை செய்யப்பட்டு, அவர்கள் உடந்தையாக இருப்பின் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் தொடர்ந்து குட்கா விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது குறிப்பிட்ட காவல் நிலையங்களில் சரித்திர பதிவேடு கணக்கு தொடங்கப்பட்டு, அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்கள்.

அவ்வாறு சரித்திர பதிவேடு கணக்கு தொடங்கப்பட்டால், அவர்கள் அதிலிருந்து வெளியே வருவதற்கு பல ஆண்டுகள் ஆகும். மேலும் போலீசார் எப்போது வேண்டுமானாலும் அவர்களது வீடுகள் மற்றும் கடைகளில் சோதனை செய்வார்கள். இதனால் உங்களது வியாபாரமும் பாதிக்கப்படும், என போலீசார் எச்சரித்துள்ளனர்.

* சொத்துகள் பறிமுதல் செய்யப்படும்
குட்கா பயன்படுத்தும் மக்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதால், லாபத்தை மட்டுமே கணக்கில் கொண்டு வியாபாரிகள் வியாபாரத்தை நடத்தக் கூடாது. அதே நேரத்தில் சமுதாய கடமை, தார்மீக பொறுப்பு உள்ளிட்டவை வியாபாரிகளுக்கும் உள்ளது. நல்ல சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அனைவரும் பயணிக்க வேண்டும். அப்போதுதான் வருங்காலத்தில் நல்ல சமுதாயத்தை நாம் உருவாக்க முடியும். குட்கா விற்று குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டால் கஞ்சா வியாபாரிகளுக்கு எவ்வாறு அவர்களது சொத்துக்களை பறிமுதல் செய்யப்பட்டதோ, அதே போன்று குட்கா வழக்கில் சிக்குபவர்களின் சொத்துக்களும் பறிமுதல் செய்யப்படும், என போலீசார் தெரிவித்துள்ளனர்.

The post பெட்டிக் கடை, மளிகை கடைகளில் குட்கா விற்றால் வியாபாரிகள் மீது குண்டர் சட்டம் பாயும்: வங்கி கணக்கு முடக்கம், கடை உரிமம் ரத்து, புளியந்தோப்பு துணை கமிஷனர் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: