ஓஎம்ஆர் சாலையில் திறந்து கிடந்த மழைநீர் வடிகால் மூடல்

திருப்போரூர்: திருப்போரூர் ஓஎம்ஆர் சாலையில், தினகரன் செய்தி எதிரொலியால் திறந்து கிடந்த மழைநீர் வடிகால்வாய் மூடப்பட்டது. திருப்போரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ஓ.எம்.ஆர். சாலையில் இரு புறமும் இருந்த ஆக்கிரமிப்புகளை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நெடுஞ்சாலைத்துறை அகற்றியது. மீண்டும் ஆக்கிரமிப்புகள் தொடரக்கூடாது என்பதால், சாலையின் இரு புறங்களிலும் மழைநீர் வடிகால்வாய் அமைக்க மாவட்ட நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்தது. இப்பணிக்காக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பேரூராட்சி பகுதியில் ஆங்காங்கே பள்ளங்கள் தோண்டப்பட்டன. ஆனால், பள்ளம் தோண்டும் பணியும் முழுமை அடையவில்லை. தோண்டிய இடங்களில் கால்வாய் பணியும் தொடங்கவில்லை.

இதுகுறித்து தினகரன் நாளிதழில் கடந்த 15ம் தேதி படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து மாவட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், ஓஎம்ஆர் சாலையை பார்வையிட்டு பணிகள் தொடங்காமல் வெறுமனே பள்ளம் தோண்டி போடப்பட்டிருந்த இடங்களை மூடுமாறு உத்தரவிட்டனர். அதன்படி நேற்று திறந்து கிடந்த பள்ளங்கள் மூடப்பட்டன. நிதி ஒதுக்கீடு மற்றும் ஒப்பந்தப்புள்ளி பணிகள் முடிவடைந்ததும் மீண்டும் மழைநீர் வடிகால்வாய் பணிகள் நடத்திடவும் நெடுஞ்சாலை துறையினர் முடிவு செய்துள்ளனர்.

The post ஓஎம்ஆர் சாலையில் திறந்து கிடந்த மழைநீர் வடிகால் மூடல் appeared first on Dinakaran.

Related Stories: