திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் திறக்கும் நாளில் தரிசிக்க 4.23 லட்சம் இலவச டோக்கன்கள்: 10 நாட்களுக்கு வழங்கப்படும்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப்படும் நாட்களில் சுவாமியை தரிசிக்க 4லட்சத்து 23 ஆயிரத்து 500 இலவச நேர ஒதுக்கீடு டோக்கன்கள் டிசம்பர் 22ம் தேதி முதல் 10 நாட்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியொட்டி வரும் டிசம்பர் 23ம்தேதி முதல் ஜனவரி 1ம்தேதி வரை 10 நாட்களுக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் குறித்து செயல் அதிகாரி தர்மாரெட்டி அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது, செயல் அதிகாரி தர்மாரெட்டி கூறியதாவது: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்துக்கு வரும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அனைத்துத்துறை ஊழியர்களும் இணைந்து பணியாற்ற வேண்டும்.

திருமலையின் முக்கிய பகுதிகளுடன் சேர்த்து, திருப்பதியின் 9 பகுதிகளில் அமைக்கப்படும் சர்வ தரிசன கவுன்டர்களில் பக்தர்களின் போக்குவரத்திற்கு ஏற்ப பணிகளை போலீசார், விஜிலென்ஸ் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். 10 நாட்களுக்கும் ஒரு வயது குழந்தைகளுடன் பெற்றோர், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், என்ஆர்ஐக்கள் மற்றும் பாதுகாப்பு பணியாளர்களுக்கான சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை தவிர்க்கும் வகையில் நேரடியாக திருமலைக்கு வந்தால் இலவச தரிசனத்தில் அனுமதிக்கும் தரிசனமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கு மாற்றாக திருப்பதியில் நேர ஒதுக்கீடு டிக்கெட் வழங்கப்படும். கடந்த 10ம்தேதி ₹300 சிறப்பு நுழைவு தரிசனத்திற்கான 2.25 லட்சம் டிக்கெட் வெளியிடப்பட்டு பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.

திருப்பதியில் உள்ள சர்வ தரிசன கவுன்டர்களில் மொத்தம் 4 லட்சத்து 23 ஆயிரத்து 500 இலவச நேர ஒதுக்கீடு டோக்கன்கள் டிசம்பர் 22ம்தேதி முதல் 10 நாட்களுக்கு வழங்கப்பட உள்ளது. மேலும், பக்தர்களுக்கு நாள் ஒன்றுக்கு 7 லட்சம் லட்டுகள் இருப்பு வைத்து வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். தரிகொண்டா வெங்கமாம்பா அன்ன பிரசாத கூடத்தில் காலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை அன்னதானம் வழங்க வேண்டும். கல்யாண கட்டாவில் போதுமான எண்ணிக்கையில் முடித்திருத்தும் பணியாளர்கள் இருக்க வேண்டும் என்றார்.

The post திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் திறக்கும் நாளில் தரிசிக்க 4.23 லட்சம் இலவச டோக்கன்கள்: 10 நாட்களுக்கு வழங்கப்படும் appeared first on Dinakaran.

Related Stories: