மலையேறும் பக்தர்களுக்கு மருத்துவ சான்று அவசியம் 2,500 பேருக்கு அனுமதி என கலெக்டர் தகவல் திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் போது

திருவண்ணாமலை, நவ.21: திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவின் போது, உடல் தகுதிக்கான மருத்துவ சான்று இருந்தால் மட்டுமே மலையேற 2,500 பேருக்கு அனுமதி சீட்டு அளிக்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் நிறைவாக, வரும் 26ம் தேதி அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபமும், அன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகா தீபமும் ஏற்றப்படும். மகா தீபம் ஏற்றப்படும் மலை மீது, சாதாரண நாட்களில் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், வனத்துறையால் பாதுகாக்கப்பட்ட இடம் என அறிவிக்கப்பட்டுள்ள மலையடிவார பகுதிகளுக்கும் செல்ல கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தீபத்திருவிழாவின் போது மட்டும் மகா தீபம் ஏற்றப்படும் நாளில், நெய் காணிக்கை நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்களுக்காக அதிக பட்சம் 2,500 பேருக்கு அனுமதி அட்டை வழங்கப்பட்டு, கடந்த சில ஆண்டுகளாக அனுமதிக்கப்படுகின்றனர்.

அதன்படி, இந்த ஆண்டும் வழக்கம் போல 2,500 பக்தர்களுக்கு மலையேற அனுமதி அட்டை வழங்கப்படும் என கலெக்டர் முருகேஷ் ஏற்கனவே அறிவித்திருந்தார். அதையொட்டி, வரும் 26ம் தேதி காலை 6 மணி முதல், கிரிவலப்பாதையில் உள்ள கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் சிறப்பு மையம் ஏற்படுத்தப்பட்டு, அங்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அடையாள அட்டை பெற விரும்புவோர், புகைப்படம், ஆதார் அட்டை உள்ளிட்ட ஏதேனும் ஒரு ஆவணம் ஆகியவற்றை கொண்டுவர வேண்டும், முதலில் வருவோருக்கு முன்னுரிமை என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், 2,668 அடி உயரமுள்ள, முறையான பாதை எதுவும் இல்லாத மலைமீது ஏறும் பக்தர்கள் திடீரென உடல் நலன் பாதிக்கப்படுவதும், மூச்சுத்திணறலில் சிக்குவதும் ஆண்டுதோறும் நடக்கிறது. எனவே, இந்த ஆண்டு புதிய கட்டுப்பாட்டை கலெக்டர் விதித்துள்ளார்.

இதுகுறித்து, திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ் கூறியதாவது: மகா தீபத்தன்று மலையேறும் பக்தர்கள், உடல் தகுதிக்கான மருத்துவச் சான்று கொண்டு வர வேண்டும். சான்று வைத்திருக்கும் பக்தர்களுக்கு மட்டுமே அடையாள அனுமதி அட்டை வழங்கப்படும். அதிகபட்சம் 2,500 பேர் மலையேற அனுமதிக்கப்படுவார்கள். மலையேறும் பக்தர்கள் எளிதில் தீப்பற்றும் பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு செல்லக்கூடாது. பக்தர்களின் பாதுகாப்புக்காக, மலைப்பகுதியில் மருத்துவ முகாம், மீட்புக் குழுவினர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்’ என்றார்.

The post மலையேறும் பக்தர்களுக்கு மருத்துவ சான்று அவசியம் 2,500 பேருக்கு அனுமதி என கலெக்டர் தகவல் திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் போது appeared first on Dinakaran.

Related Stories: