கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தால் விசாரணைக்கு ஆஜராக மறுப்பு நடிகை நமீதா கணவர், பாஜ பிரமுகருக்கு மீண்டும் ‘சம்மன்’: ஏமாந்தவர்கள் புகார் தர போலீஸ் அழைப்பு

சேலம்: போலீஸ் விசாரணைக்கு வராததால் நடிகை நமீதா கணவர் மற்றும் பாஜ பிரமுகருக்கு மீண்டும் சம்மன் அனுப்ப சேலம் போலீசார் முடிவு செய்துள்ளனர். சேலம் பைனான்சியர் கோபால்சாமியிடம், எம்எஸ்எம்இ புரமோஷன் கவுன்சில் என்ற அமைப்பின் தலைவரான முத்துராமன், செயலாளரான துஷ்யந்த் யாதவ் ஆகியோர் ரூ.41 லட்சம் பெற்று ஏமாற்றிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள், எம்எஸ்எம்இ புரமோஷன் கவுன்சில் என்பது ஒன்றிய அரசின் நிறுவனம் என கூறி தேசிய கொடி, அரசின் முத்திரை ஆகியவற்றை மோசடியாக பயன்படுத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடர்பாக, தமிழ்நாடு தலைவரான நடிகை நமீதாவின் கணவர் சவுத்ரி, பாஜ ஊடக பிரிவு செயலாளராக இருந்த மஞ்சுநாத் ஆகியோரை விசாரணைக்கு வருமாறு சேலம் போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால் அவர்கள் இருவரும் வரவில்லை. இதற்கிடையே, கைதான உசிலம்பட்டியை சேர்ந்த முத்துராமன், தனது மகளுக்கு திருமணம் என ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். இதில் போலீஸ் பாதுகாப்புடன் 6 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. இன்று மாலை 4 மணிக்கு அவர் சேலம் சிறைக்கு கொண்டு வரப்பட்டு அடைக்கப்படுவார். இந்நிலையில், இந்த வழக்கில் மோசடி செய்யப்பட்ட 41 லட்சம் ரூபாயை செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து நேற்றுமுன்தினம் புகார்தாரர் கோபால்சாமி சென்னை சென்றார். ஆனால் வழக்கை 21ம் தேதிக்கு நீதிமன்றம் தள்ளி வைத்தது. அன்று ரூ.41 லட்சத்தை நீதிமன்றத்தில் செலுத்தி முத்துராமன் ஜாமீன் கேட்பார் என தெரிகிறது.இதுகுறித்து போலீசார் கூறுகையில், `ஒன்றிய அரசு தங்களிடம் நெருக்கமாக இருப்பதாக கூறி கடன் பெற்றுத் தருவதாக பெரும் தொகையை கமிஷனாக பெறலாம் என்ற நோக்கத்தில் எம்எஸ்எம்இ என்ற போலி அமைப்பை தொடங்கியுள்ளனர். தற்போது வெளியான ஆடியோவில் வரும் தகவலை பார்த்தால் பெரும் அளவில் மோசடி நடை பெற்றிருப்பது தெரிகிறது. ஆனால் எங்களுக்கு ஒரு புகார் மட்டுமே வந்துள்ளது.

ஏமாற்றப்பட்டவர்கள் வெளியே வந்தால் ஏதாவது பிரச்னை ஏற்பட்டு விடும் என தயங்குகின்றனர். ஏமாந்தவர்கள் புகார் கொடுத்தால்தான் அதுதொடர்பாக விசாரிக்கும்போது, முத்துராமன் இதுபோன்ற மோசடியான பணத்தை வாங்கி யாருக்கெல்லாம் கொடுத்துள்ளார்? பணம் வாங்கிய பாஜ நிர்வாகிகள் யார்? என தெரியவரும். பாஜ நிர்வாகியான மஞ்சுநாத், நமீதா கணவர் சவுத்ரி ஆகியோர் விசாரணைக்கு வந்தால்தான், மோசடியில் யாருக்கெல்லாம் தொடர்புள்ளது என்ற முழுவிவரம் தெரியும். இதற்காகத்தான் சம்மன் அனுப்பப்பட்டது.

ஆனால் அவர்கள் ஆஜராகவில்லை. மீண்டும் அவர்களுக்கு சம்மன் அனுப்பப்படும். தாங்கள் நேரில் ஆஜராகினால் போலீசார் கைது செய்து விடலாம் என கருதி அவர்கள் வராமல் இருக்கலாம். ஆனால் எப்படியிருந்தாலும் அவர்கள் விசாரணைக்கு வந்தாக வேண்டும். இந்த வழக்கில் புகார்தாரரான கோபால்சாமி, பணம் கிடைத்து விட்டது என்பதற்காக புகாரை வாபஸ் பெறமுடியாது. தேசிய கொடி, அரசு சின்னத்தை பயன்படுத்தி மோசடி செய்திருப்பதால் வழக்கிலிருந்து தப்பிக்க முடியாது. இதில் பணம் கொடுத்து யாராவது பாதிக்கப்பட்டிருந்தால் மத்திய குற்றப்பிரிவில் புகார் கொடுக்கலாம்’’ என்றனர்.

The post கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தால் விசாரணைக்கு ஆஜராக மறுப்பு நடிகை நமீதா கணவர், பாஜ பிரமுகருக்கு மீண்டும் ‘சம்மன்’: ஏமாந்தவர்கள் புகார் தர போலீஸ் அழைப்பு appeared first on Dinakaran.

Related Stories: