2ம் நிலை பெண் காவலர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி தொடக்கம் 17 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்பு வேலூர் அடுத்த சலமநத்தத்தில்

வேலூர், நவ.16: புதிதாக தேர்வு செய்யப்பட்டு பயிற்சியில் ஈடுபட்டுள்ள 17 மாவட்டங்களை சேர்ந்த 2ம் நிலை பெண் காவலர்களுக்கு வேலூர் அடுத்த சலமநத்தத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சி நேற்று தொடங்கியது. வேலூர் கோட்டை வளாகத்தில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் மதுரை, கோவை, விழுப்புரம் உள்பட 17 மாவட்டங்களை சேர்ந்த 2ம் நிலை பெண் காவலர்கள் 273 பேருக்கு கடந்த ஜூன் மாதம் 1ம் தேதி முதல் 7 மாத கால அடிப்படை பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி தினமும் காலை, மாலை என இருவேளையும் கவாத்து பயிற்சி, யோகா, முதலுதவி அளித்தல், நன்னடத்தை, கலவரத்தை கட்டுப்படுத்துவது, சட்டம் மற்றும் கணினியை கையாளுவது உள்ளிட்ட பல்வேறு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், காவல் நிலையங்களில் பணியாற்றுவது, நீதிமன்றத்தில் கைதியை ஆஜர்படுத்துவது, எஸ்பி அலுவலக பணிகள் ஆகியன குறித்து பயிற்சி வழங்கப்பட்டது. இந்நிலையில், வேலூர் அடுத்த சலமநத்தம் துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தில், 2ம் நிலை பெண் காவலர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி நேற்று தொடங்கியது. இதற்காக காவலர் பள்ளி முதல்வர் ராதாகிருஷ்ணன் தலைமையில், 2ம் நிலை பெண் காவலர்கள் 72 பேர் துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு ஏகே 47, எஸ்எல்ஆர் உள்ளிட்ட துப்பாக்கிகள் சுடும் பயிற்சி மற்றும் அவற்றை கையாளும் முறைகள் குறித்து பயிற்சி வழங்கப்பட்டது. தொடர்ந்து, மீதமுள்ள 2ம் நிலை பெண் காவலர்களுக்கு அடுத்தடுத்து பயிற்சி வழங்கப்படும் என காவலர் பயிற்சி பள்ளி போலீசார் தெரிவித்தனர்.

The post 2ம் நிலை பெண் காவலர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி தொடக்கம் 17 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்பு வேலூர் அடுத்த சலமநத்தத்தில் appeared first on Dinakaran.

Related Stories: