தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் உயிர் சேதம் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தகவல்

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால் உயிர் சேதம் ஏற்படாத வகையில் தேவையான நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கூறினார். தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் சென்னை, எழிலகத்தில் உள்ள அவசரகால செயல்பாட்டு மையத்தில் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:தமிழக முதல்வர் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக வடகிழக்கு பருவ மழையால் உயிர்சேதம் இல்லாத அளவுக்கு மாவட்ட நிர்வாகம் முடுக்கி விடப்பட்டுள்ளது.

தற்போது நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், திருவாரூர் மாவட்டத்தில் அதிக மழை பெய்து வருகிறது. அந்த மாவட்ட நிர்வாகம் தேவையான நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை 8 மாவட்டங்களில் அதிக மழையும், 7 மாவட்டங்களில் இயல்பான மழையும், 23 மாவட்டங்களில் குறைவான மழையும் பதிவாகியுள்ளது.பேரிடர் காலங்களில் மீட்பு பணிகளை துரிதமாக மேற்கொள்ள தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின் 400 வீரர்கள் கொண்ட 12 குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

தேசிய பேரிடர் மீட்பு படையின் 200 பேர் அரக்கோணம் மற்றும் சென்னையில் தயார் நிலையில் உள்ளனர்.தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களில் 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்களும், தமிழகம் முழுவதும் 4,967 நிவாரண முகாம்களும் தயாராக வைக்கப்பட்டுள்ளது. மனித உயிர் சேதமோ, கால்நடைகள் உயிர் சேதமோ ஏற்படாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையில், கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள 27 மாவட்டங்களில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் கடிதம் மூலம் அறிவுறுத்தியுள்ளார். தற்போது வைகை அணை திறக்கப்பட்டுள்ளது. அங்குள்ள 80 ஆயிரம் பேருக்கு எஸ்எம்எஸ் அனுப்பி வைக்கப்பட்டது என்றார்.

The post தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் உயிர் சேதம் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: