வயநாட்டில் துப்பாக்கி சூடு சம்பவம் நீலகிரி எல்லையில் சோதனை சாவடிகளில் எஸ்பி ஆய்வு

ஊட்டி : வயநாடு மாவட்டத்தில் கேரள மாநில தண்டர்போல்ட் சிறப்பு குழுவிற்கும் மாவோயிஸ்ட்களுக்கும் இடையே துப்பாக்கி சூடு நடந்தது. இந்நிலையில் நீலகிரி மாவட்ட எல்லையில் சோதனை சாவடிகளில் மாவட்ட எஸ்பி சுந்தரவடிவேல் ஆய்வு செய்தார்.தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் கேரளா, கர்நாடகா மாநில எல்லையில் அமைந்துள்ளது. நீலகிரியை ஒட்டியுள்ள கேரளாவின் வயநாடு மாவட்ட வனப்பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாகவே மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் இருந்து வருகிறது.

நீலகிரி மாவட்டம், வயநாடு ஒட்டி அமைந்துள்ளதால், நீலகிரிக்குள் மாவோயிஸ்ட்கள் நுழைந்து விடாதபடி நீலகிரி எல்லையோர கிராம பகுதிகள், வனப்பகுதிகளில் தமிழக அதிரடிப்படையினர் மற்றும் நக்சல் தடுப்பு பிரிவினர் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வயநாடு அருகே கம்பமலை எஸ்டேட் பகுதியில் கடந்த மாதம் புகுந்த மாவோயிஸ்ட்கள் அங்குள்ள அலுவலகத்தை அடித்து உடைத்ததுடன், கண்காணிப்பு கேமிராக்களையும் சூறையாடினர். இதனால் தமிழக பகுதிகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழக அதிரடிப்படையினர் மற்றும் நக்சல் தடுப்பு பிரிவினர் எல்லையோர பகுதிகளில் விழிப்புடன் தொடர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் கேரள மாநில தண்டர்போல்ட் சிறப்பு குழுவிற்கும் மாவோயிஸ்ட்களுக்கும் இடையே துப்பாக்கி சூடு நடந்தது.

இதனை தொடர்ந்து தமிழக- கேரள மாநில எல்லையில் அமைந்திருக்கும் நீலகிரி மாவட்டத்தின் 11 மாநில எல்லையோர சோதனை சாவடிகள் மற்றும் வனப்பகுதியை ஒட்டி உள்ள பகுதியில் அமைந்திருக்கும் ஓவேலி வன சோதனை சாவடி ஆகியவற்றில் நேற்று நீலகிரி மாவட்ட எஸ்பி சுந்தரவடிவேல் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கு பணியில் இருக்கும் காவலர்களிடம் விழிப்புடன் இருக்குமாறு அறிவுரை வழங்கினார்.

The post வயநாட்டில் துப்பாக்கி சூடு சம்பவம் நீலகிரி எல்லையில் சோதனை சாவடிகளில் எஸ்பி ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: