மோடி அரசின் கொள்கை ரயில்வே துறையை கேலிக்கூத்தாக்கியுள்ளது : மதுரை எம்.பி.சு வெங்கடேசன் காட்டம்

சென்னை : அனுமதி வாங்காமல் விளம்பரம் செய்யக்கூடாது என்று விதி இருந்தும் அனுமதி வாங்காமல் விளம்பரம் செய்துள்ள நிறுவனத்தின் மீது ரயில்வே நிர்வாகமே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எம்.பி.சு. வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை தாம்பரத்தில் இருந்து திருச்சி மதுரை திருநெல்வேலி வழியாக திருவனந்தபுரத்துக்கு தனியார் நிறுவனம் ஒன்று ரயிலை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது போல் விளம்பரம் வெளியிட்டுள்ளது. இது பாரத் கௌரவ் திட்டத்தின் கீழ் அவர்கள் வாங்கி வைத்துள்ள வண்டி தொடரை வைத்து இயக்க உள்ளதாக தெரிகிறது. ஆனால் தென்னக ரயில்வேயின் தலைமை அதிகாரிகள் அப்படி ஒரு ரயில் இயக்க நாங்கள் எந்த அனுமதியும் தரவில்லை என்று எனக்கு பதில் கூறியுள்ளனர்.

அனுமதி வாங்காமல் விளம்பரம் செய்யக்கூடாது என்று விதி இருந்தும் அனுமதி வாங்காமல் விளம்பரம் செய்துள்ள நிறுவனத்தின் மீது ரயில்வே நிர்வாகமே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ரயில்வே துறையின் மீதுள்ள நம்பகத்தன்மை தொடர்ந்து கேள்விக்குறியாகி வரும் சூழலில் தனியார் நிறுவனம் தனது விருப்பப்படி பெரும் கட்டணக்கொள்ளையில் ரயில் இயக்கப்படும் என்று விளம்பரம் தருவது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. முன்பெல்லாம் ரயில்வே நிர்வாகம் திருவிழாக் காலங்களில் அன்றாட ரயில்களின் கட்டணத்தில் சிறப்பு ரயில்களை இயக்கி பயணிகளுக்கு வசதி செய்து கொடுத்தது. கொரோனாவிற்கு பின்பு சிறப்பு ரயில்களை சிறப்புக் கட்டண சிறப்பு ரயில்கள் என்று பெயர் வைத்து பெரும் கட்டணத்தை ரயில்வே வசூலிக்கிறது. பொதுமக்களின் அவசரத் தேவையை அதீத லாபத்திற்கான வாய்ப்பாக பார்க்கிறது.

இந்திய ரயில்வேயின் அன்றாட ரயில்களிலும் மூத்த குடிமக்களுக்கான சலுகையை ரத்து செய்து விட்டார்கள் . தட்கல் பிரிமியம் என்று கட்டணத்தை அன்றாட ரயில் வண்டிகளிலும் கடும் உயர்வை ஏற்படுத்தி விட்டார்கள். டிக்கெட் விற்று பெருலாபம் சம்பாதித்து சலித்துப்போய் இப்போது ரயில் தடத்தை விற்று லாபம் சம்பாதிப்பதில் தீவிரம் காட்டுகின்றனர். இதன் விளைவு தனியாரின் கைகள் ரயில்வே துறையின் மீது சுதந்திரமாக படர்கிறது. இது ரயில்வேயின் நலனுக்கும் மக்களின் நலனுக்கும் எதிரானது.என்று குறிப்பிட்டுள்ளார்.

The post மோடி அரசின் கொள்கை ரயில்வே துறையை கேலிக்கூத்தாக்கியுள்ளது : மதுரை எம்.பி.சு வெங்கடேசன் காட்டம் appeared first on Dinakaran.

Related Stories: