நங்கநல்லூர், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் 3 கோயில்களுக்கு புதிதாக தங்கத்தேர்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி

சென்னை: நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயில், புரசைவாக்கம் கங்கா ஈஸ்வர் கோயில், பவானியம்மன் கோயில் ஆகிய 3 கோயில்களுக்கு புதிதாக தங்கத்தேர் வாங்கப்படுகிறது என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் கோயிலில், நேற்று காலை கும்பாபிஷேக விழா நடந்தது. இதில் பங்கேற்ற அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பக்தர்களுடன் சேர்ந்து தங்கத்தேரை இழுத்தார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இதுவரை 1,118 கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. ரூ.5 ஆயிரத்து 428 கோடி மதிப்பிலான கோயில் சொத்துகள் மீட்கப்பட்டுள்ளது. 67 தங்கத்தேர் நல்ல விதமான பயன்பாட்டில் உள்ளது. 57 வெள்ளித்தேர் நல்லவிதமான பயன்பாட்டில் உள்ளது. ராமேஸ்வரத்தில் 12 ஆண்டுகள் ஓடாமல் இருந்த தேர் இழுக்கப்பட்டு உள்ளது.

இதுபோல திருத்தணியில் தங்கத்தேரும், வெள்ளித் தேரும் இழுக்கப்பட்டு உள்ளது. புதிதாக நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயில், புரசைவாக்கம் கங்கா ஈஸ்வர் கோயில், பவானியம்மன் கோயில் ஆகிய 3 கோயில்களுக்கு 3 தங்கத்தேர்களும், மேலும் 5 கோயில்களுக்கு 5 வெள்ளித் தேர்களும் வாங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இது தவிர புதிதாக மரத்தேர்கள் 71 அமைக்க ரூ.58 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இந்த ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் நடந்து வரும் திருப்பணிகள் அனைத்தையும் பார்த்து, வசை பாடியவர்கள் இன்று வாழ்த்தும் நிலையில் உள்ளனர்.

திமுக ஆட்சியில் ரூ.450 கோடி அரசு மானியமாக, கோயில் திருப்பணிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் இவ்வளவு பெரிய தொகையை மானியமாக வழங்கியதில்லை. பாஜ அதிகாரத்திற்கு வந்தால், இந்து சமய அறநிலையத்துறையே இருக்காது என பாஜ தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு அண்ணாமலை அந்த பதவியில் இருப்பாரா என பாருங்கள். இருந்தால் இந்து சமய அறநிலையத்துறை குறித்து பேசட்டும். இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

The post நங்கநல்லூர், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் 3 கோயில்களுக்கு புதிதாக தங்கத்தேர்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: