தமிழகத்துக்கு போதுமான நிதி ஒதுக்கவேண்டும்: ஒன்றிய அமைச்சருக்கு தயாநிதி மாறன் எம்பி கடிதம்


சென்னை: மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூருக்கு எழுதியுள்ள கடிதம்: 1951ம் ஆண்டு முதன்முதலில் சீனாவில் ஆசிய விளையாட்டு போட்டி தொடங்கப்பட்டது. தற்போது இந்திய வீரர்கள் விளையாட்டு போட்டிகளில் சிறப்பாக விளையாடி பதக்கம் வென்று வருகிறார்கள். சீனாவில் நடைபெற்ற 19வது ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா 107 பதக்கங்கள் பெற்று சாதனை படைத்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த 20 பேர் பதக்கம் வென்றுள்ளனர். விளையாட்டு துறையில் இந்தியா அதிகளவு முன்னேறி வருகிறது. விளையாட்டை மேம்படுத்த ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் வீரர்களை உற்சாகப்படுத்தியும், விளையாட்டு கட்டமைப்புகளை உயர்த்திடவும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

பாஜக ஆட்சி செய்யும் குஜராத், உத்திரபிரதேசம், அருணாச்சலபிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு அதிகளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்திற்கு வெறும் ரூ33 கோடியே ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகம் விளையாட்டு துறையில் சிறந்து விளங்க முதல்வர் மு.க.ஸ்டாலின், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் முயற்சியால் வீரர்களுக்கு பல்வேறு சலுகைகளும், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் விளையாட்டு மைதானம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் 44வது ஒலிம்பியாட் போட்டி நடைபெற்றது. சர்வதேச போட்டியை தமிழக அரசு சிறப்பாக நடத்தியது.

இதை அனைத்து நாடுகளும் பாராட்டியது. 2024ம் ஆண்டு சென்னையில் ஆசிய கடற்கரை விளையாட்டு போட்டியை நடத்த அனுமதியை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டிற்கு போதுமான நிதியை ஒதுக்கி விளையாட்டு வீரர்கள் பல சாதனைகளை படைக்க ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.

The post தமிழகத்துக்கு போதுமான நிதி ஒதுக்கவேண்டும்: ஒன்றிய அமைச்சருக்கு தயாநிதி மாறன் எம்பி கடிதம் appeared first on Dinakaran.

Related Stories: