தீபாவளிக்கு ரெடியான ‘குட்டி ஜப்பான்’: புஷ்ஷ்… டம்… டமார்…

சிறப்பு செய்தி பட்டாசு என்றதும் பட்டென நினைவுக்கு வரும் ஊர் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி. ஒட்டுமொத்த இந்தியாவையும் ஒளிமயமாக்கும் ‘குட்டி ஜப்பான்’ என அடைமொழியோடு அழைக்கப்படும் சிவகாசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் முக்கிய ெதாழிலாக பட்டாசு தயாரிப்பு விளங்குகிறது. இப்பகுதிகளில் மட்டும் சிறிய, பெரிய அளவிலான 1,070 பட்டாசு ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளில் சுமார் 8 லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பை பெறுகின்றனர். சிவகாசி தவிர இந்தியாவின் சில பகுதிகளில் பட்டாசு உற்பத்தி நடந்தாலும், நாட்டின் மொத்த பட்டாசு உற்பத்தியில் 95 சதவீதம் சிவகாசியில்தான் நடக்கின்றது. பொதுவாக ஜனவரி முதல் ஜூலை வரை வடமாநிலங்களில் நடைபெறும் விழாக்களை கணக்கில் கொண்டு பட்டாசுகள் தயார் செய்யப்படும். ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் தீபாவளி பண்டிகையை குறிவைத்து, அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் புதுப்புது பெயர்களில் விதவிதமான பேன்சி ரக பட்டாசுகள் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளன.

மழலைகள் விரும்பும் மோட்டு பட்லு: மோட்டு பட்லு என்ற கிராக்கிளிங் சக்கர வெடிகள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த கிராக்கிளிங் சக்கரம் பற்ற வைத்தவுடன் விசில் அடித்துக் கொண்டே மின்மினி பூச்சி போன்று கலர் கலராய் மினுமினுக்கும். 5 கலர்களில் ஒளி தரும். இந்த பட்டாசு முதலில் ‘மோட்டு’ விசில் கொடுக்க ‘பட்லு’ ரவுண்டு கட்டி டான்ஸ் ஆடிக்கொண்டே கலர் கலராய் மினுமினுக்கும். இந்த பட்டாசுகள் குழந்தைகளை கவரும் வகையில் அமைந்துள்ளது. 20 அடி பறக்கும் ஒய்யார அழகி: பெண்களுக்காகவே உருவாக்கப்பட்டுள்ள இந்த பட்டாசுகளை ஒய்யார அழகி என்று செல்லமாக கூறி விற்பனை செய்கின்றனர். ஆர்வமாக பார்த்தால் பூச்சட்டி வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பட்டாசுகள், பற்ற வைத்தவுடன் 20 அடி வரை உயரே சென்று 100 வினாடிகள் தொடர்ந்து எரிந்து கொண்டே பூரிப்பை ஏற்படுத்துகின்றது.

ஆஹா… ஆகாய சச்கரம்: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கக்கூடிய வகையில் இந்த பட்டாசுகள் உருவாக்கப்பட்டுள்ளன. கிரைஸி வீல் என்ற பெயரில் இந்த பட்டாசுகள் வந்துள்ளன. 9 ஷாட் கொண்ட இந்த வெடிகள் 200 அடி வரை உயரே சென்று 3 சக்கரங்களாக பிரிந்து வானில் சக்கரமாக சுற்றும். மனதை கவரும் மான்சா மூசா: ஆப்ரிக்க இஸ்லாமிய அரசன் பெயரில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த வெடிகள் பற்ற வைத்தவுடன் ரவுண்ட் கட்டிக்கொண்டே 20 அடி வரை உயரே சென்று 17 செகண்ட் கலர் கலராய் படபடவென்று வெடித்துக்கொண்டே நமது மனதை சிதறடிக்கும். 24 வினாடி… 90 வாட்ஸ் வெடி: சரவெடிக்கு அடுத்த சாய்சாக இந்த 90 வாட்ஸ் பட்டாசுகள் 24 வினாடிகள் வெடித்துக்கொண்டே நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். 3 ஆயிரம் சரவெடி பட்டாசை வெடித்து மகிழ்ந்த உணர்வை ஏற்படுத்துகிறது. தள்ளுபடி போக இந்த பட்டாசு ரூ. 150க்கு மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.

விசிலு பறக்கும் டோரோ சிங்கர்: வெடிக்காத இந்த வெடியில் விசில் சத்தம் மட்டுமே எழும். பற்ற வைத்தவுடன் விசில் எழுப்பியபடி மேலே செல்லும். ஒவ்வொன்றும் ஒவ்வொரு கலரில் மேலே சென்று குழந்தைகளை மகிழ்விக்கும். 2கே கிட்ஸ்களை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள பட்டாசுகள், பற்ற வைத்தவுடன் 350 அடி வரை வானில் சென்று வெடித்து சிதறும். வெடிக்கும்போது 7 வகையான கலரில் மினுமினுக்கும். வானில் வண்ணஜாலம் காட்டும் இந்த பட்டாசுகள், மண்ணில் இருந்து பார்க்கும்போது பிரமிப்பாக இருக்கும். இந்த வகை பட்டாசுகள் பிக் பிளாஷ், கோல்ட் கிங், மில்லியன் என்ற பெயரில் சந்தைப்படுத்தப்பட்டுள்ளன. வேணுமா 5ஜி துப்பாக்கி: பள்ளி மாணவ, மாணவிகளை கவரும் வகையில் இந்த வகை பட்டாசுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஒரு பாக்சில் 2 கை துப்பாக்கிகள் உள்ளன. துப்பாக்கி முனையில் பற்ற வைத்தால் படபடவென வெடிக்கின்றது. பற்ற வைத்தவுடன் பயங்கர விசில் சத்தம் எழுப்பியபடி விரைந்து விண்ணில் பாய்கிறது. வெடிக்காத இந்த பட்டாசுகள் விசில் சத்தத்தை பிரமிப்புடன் உணரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன.

தங்க மழை பொழியும் ராக்கெட்… இந்தாண்டு பலவிதமான ராக்கெட்கள் விற்பனைக்கு வந்துள்ளன. பீகாக் டான்ஸ் என்ற ராக்கெட் வானில் மயில் ஆடுவது போல இருக்கும். ரெயின் அண்ட் தண்டர் என்ற ராக்கெட் வானில் சென்று தங்க, வெள்ளி மழை பெய்ய வைக்கும். பாரடைஸ் 250 என்பது 250 முறை வானில் சென்று 20 வகையான தோற்றத்தை வெளிப்படுத்தும். கோல்டன் ஸ்பைடர் வானில் செலுத்தியவுடன் தங்க சிலந்தி வானில் தெரியும். கலர் ரெயின் எனப்படும் பிளவர் பாட்ஸ் மல்டி கலரில் 50 வினாடிகள் தொடர்ந்து எரியும். கோல்டன் ரெயின் ராக்கெட் தங்க மழை பொழியும். ராக்கெட் வகைகளில் 10 கலர் ராக்கெட், பாராசூட் ராக்கெட், 3 சவுண்ட் ராக்கெட், 2 வெடி ராக்கெட், சக்கர ராக்கெட், வெடி ராக்கெட், கலர் ராக்கெட் என 10 வகைகளில் கிடைக்கின்றது. கம்பி மத்தாப்பூக்களில் இந்த முறை 50 செமீ அளவிலும், 75 செமீ அளவிலும் வந்துள்ளன. இப்படியாக தீபாவளியை பரவசமாக கொண்டாட பட்டாசுகள் தயாராகி விற்பனைக்கு வந்துள்ளன. வாங்குங்க… வெடிங்க… மகிழ்ச்சியோடு கொண்டாடுங்க…!

* விறுவிறு விற்பனையில் விஐபி கிப்ட் பாக்ஸ்கள்

சிவகாசியில் பெரிய மற்றும் சிறிய பட்டாசு தயாரிப்பு நிறுவனங்களில் 15 வகையில் இருந்து 55 வகையான கிப்ட் பாக்ஸ்கள் விற்பனைக்கு வந்துள்ளன. இதில் குழந்தைகளை கவரும் வகையில் தீப்பெட்டி மத்தாப்பு, கம்பி மத்தாப்பு, பாம்பு மாத்திரை, தரை சக்கரம், புஸ்வாணம், கார்ட்டூன் வெடிகள் என 20க்கும் மேற்பட்ட பட்டாசு ரகங்கள் கொண்ட கிப்ட் பாக்ஸ்களும், பெண்களை கவரும்விதமாக தரை சக்கரம், கலர் புஸ்வாணம், வாண வெடிகள் என அடங்கிய கிப்ட் பாக்ஸ்களும், இளைஞர்களை கவரும் விதமாக புல்லட் பாம், ஆட்டோ பாம், அனுகுண்டு, லட்சுமி, சரவெடிகள், ராக்கெட், போன்ற வெடிகள் அடங்கிய கிப்ட் பாக்ஸ்களும் தற்போது கடைகளில் பேக்கிங் செய்து விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. கிப்ட் பாக்ஸ்கள் ரூ. 350 முதல் ரூ. 3 ஆயிரம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

* தீவுத்திடலில் 15 நாள் பட்டாசு விற்பனை

தீபாவளியை முன்னிட்டு ஆண்டுதோறும் சென்னை தீவு திடலில் பட்டாசு விற்பனை செய்யப்படுவது வழக்கம். இந்த ஆண்டு தீவு திடலில் அக். 29 முதல் நவ. 12 வரை பட்டாசு விற்பனை செய்யப்பட உள்ளது. தீவுத்திடலில் பட்டாசு விற்பனை செய்வதற்காக 55 கடைகள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

* தேனீக்கள் பறக்கும்…

‘ஹனி பீஸ்’ என்ற பட்டாசு கொளுத்தியவுடன், பச்சை-சிவப்பு நிறங்களில் ஒளிர்ந்து, தேனீக்கள் பறந்து மேலே செல்வது போல் தெரியும். இதுதவிர, வழக்கமான மத்தாப்பு, தரைச்சக்கரம், சாட்டை வகைகள், பூச்சட்டி, பல்வண்ண கலர் பென்சில், சாவி ஜமீன் சக்கரம், பேன்சி பட்டாசுகள், புல்லட், ராக்கெட்டுகள், சில்வர்பாம், ஆட்டோபாம், குருவிவெடி, லட்சுமி வெடி, டபுள் ஷாட், டிரிபிள் ஷாட் உள்ளிட்டவையும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

* அந்தரத்தில் அரை மணிநேரம்…

வானத்தில் வண்ண ஜாலங்கள் காட்டும் வெளிச்சத்துடன் வெடிக்கக்கூடிய பட்டாசு வகைகள் 15 ஷாட் முதல் 240 ஷாட் வரை உள்ளன. இவை ரூ. 280 முதல் ரூ. 5,500 வரை விற்பனை செய்யப்படுகின்றன. ஒவ்வொரு கம்பெனி பட்டாசுகளுக்கு ஏற்ப விலையில் மாற்றம் இருக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர். இவ்வகை பட்டாசுகள் ஒன்றரை நிமிடம் முதல் 30 நிமிடங்கள் வரை தொடர்ச்சியாக வெடித்து வானில் வண்ண ஜாலங்கள் நிகழ்த்துகின்றன.

* உலக கோப்பை கிரிக்கெட் வரவேற்கும் வகையில் வீரர்கள், பேட், பால் வெடி

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது, நடைபெறுவதால் அதனை வரவேற்று, கிரிக்கெட் ரசிகர்களை கவரும் வகையில் பேட் – பால் பட்டாசுகள் களமிறங்கியுள்ளன. திரியில் தீயை பற்ற வைத்தவுடன், கிரிக்கெட் மட்டையிலிருந்து கம்பி மத்தாப்பு போல எரிந்து, பந்திலிருந்து வண்ணக் கலர்களில் புகை வெளிவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ‘கிக்கபிள்ஸ்’ என்ற பட்டாசின் மேல் சாக்லேட் கவர் போல் மூடப்பட்டுள்ளது. அதன் திரியில் தீயை பற்ற வைத்தவுடன் சக்கரம் போல் சுழன்று, அதிலிருந்து 2 பம்பரங்கள் தனியாக வெளியேறி கலர் வெளிச்சத்துடன் சுழல்கிறது. சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கு தனித்தனியே வடிவமைக்கப்பட்டுள்ள ‘கிண்டர்ஜாய் சாக்லேட்’ வடிவ பட்டாசும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் தீயை பற்ற வைத்தவுடன், சக்கரம் போல சுற்றி, அதிலிருந்து 2 வண்ணத்து பூச்சிகள் பிரிந்து மேலே எழும்பி சென்று சடசடவென வெடித்து சிதறும்.

* ஓராண்டு உற்பத்தி தீபாவளியில் காலி

‘குட்டி ஜப்பான்’ எனப்படும் சிவகாசியில் இருந்து தான் இந்தியா முழுவதற்கும் விதவிதமான பட்டாசுகள் சப்ளை செய்யப்படுகின்றன. ஆண்டு முழுவதும் சிவகாசியில் பட்டாசு உற்பத்தி நடந்து கொண்டே இருக்கும். கோயில் திருவிழா, திருமணம், அரசியல் கட்சி நிகழ்ச்சிகள் என்று அனைத்து விழாக்களுக்கும் பட்டாசு வாங்கப்பட்டாலும் இங்கு ஒரு ஆண்டு முழுவதும் உற்பத்தி செய்யும் பட்டாசுகளை தீபாவளிக்கு மொத்தமாக விற்று தீர்த்து விடுவார்கள்.

The post தீபாவளிக்கு ரெடியான ‘குட்டி ஜப்பான்’: புஷ்ஷ்… டம்… டமார்… appeared first on Dinakaran.

Related Stories: