துரியோதனன் போன்ற துரோக சிந்தனையுடைய எடப்பாடி பழனிசாமி நாடாளுமன்ற தேர்தலில் வீழ்வது உறுதி: டிடிவி தினகரன் பேட்டி

கோவை: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி பெரும் வீழ்ச்சியை சந்திக்கப் போகிறார் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். கோவை சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட அமமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டார். கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி பெரும் வீழ்ச்சியை சந்திக்கப் போகிறார். பிரதமரை தேர்ந்தெடுக்கும் கூட்டணியில் அமமுக இருக்கும்.

ஒருவேளை கூட்டணியில் அமமுக இருக்க முடியாது என்ற சூழ்நிலை வந்தால் தனித்து நிற்கவும் தயார். வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ், பாஜக போன்ற தேசிய கட்சிகளுடன் கூட்டணியில் அமமுக இருக்கலாம். எங்கள் லட்சியம் நிறைவேறும் வரை நாங்கள் ஓய மாட்டோம். நான் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து இதுவரை முடிவு செய்யவில்லை; நாங்கள் யாரையும் போய் சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை. துரியோதனன் போன்ற துரோக சிந்தனையுடைய எடப்பாடி பழனிசாமி நாடாளுமன்ற தேர்தலில் வீழ்வது உறுதி. 2 ஆண்டுகளாக தேவர் குருபூஜைக்கு செல்லாத எடப்பாடி பழனிசாமி, தேர்தல் வருவதால் இந்தாண்டு செல்கிறார்.

அமமுக ஒபிஎஸ் இடையேயான நட்பு அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் நன்றாக இருக்கின்றது என தெரிவித்தார். தொடர்ந்து அதிமுக – பா.ஜ.ககூட்டணி பிரித்தது குறித்த கேள்விக்கு, இரு கட்சிகள் ஒன்றாக இருந்தனர் இப்போது பிரிந்து இருக்கின்றனர், அப்படித்தான் பார்க்க முடியும் என தெரிவித்தார்.

The post துரியோதனன் போன்ற துரோக சிந்தனையுடைய எடப்பாடி பழனிசாமி நாடாளுமன்ற தேர்தலில் வீழ்வது உறுதி: டிடிவி தினகரன் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: