ஆயுத பூஜையையொட்டி பூமார்க்கெட்டில் குவிந்துள்ள பூக்கள்

*மாலை கட்டும் பணியில் பெண்கள் தீவிரம்

கோவை : கோவை மாவட்டத்தில் நவராத்திரி விழாவையொட்டி, வீடுகளில் கொலு பொம்மைகள் வைத்து பொதுமக்கள் கொண்டாடி வருகின்றனர். அம்மன் கோயில்களிலும் தினமும் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. இந்நிலையில், நவராத்திரி விழாவின் முக்கிய நிகழ்வான ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை வரும் 23, 24 ஆகிய தேதிகளில் கொண்டாடப்படுகிறது.

ஆயுத பூஜை முன்னிட்டு பெரிய, சிறிய தொழில் நிறுவனங்கள், கம்பெனிகள், கடைகள் என அனைத்தும் மலர்கள், வண்ண காதிதங்கள் மூலம் அலங்கரிக்கப்பட்டு, வாழை தோரணங்கள் அமைத்து வேலைக்கு பயன்படுத்தும் பொருட்களை வைத்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபடுவர். வாரயிறுதி மற்றும் தொடர் விடுமுறை வருவதால், பல நிறுவனங்கள், கம்பெனிகளில் ஆயுத பூஜை இன்று கொண்டாடப்படுகிறது.

இதற்காக, பூக்கள், பழங்கள், வாழை போன்றவை வாங்க பலர் பூ மார்க்கெட்டில் குவிந்தனர். மேலும், ஆயுத பூஜை முன்னிட்டு பூக்களின் விலை நேற்று அதிகரித்து காணப்பட்டது. அதன்படி, மல்லி பூ ஒரு கிலோ ரூ.1200க்கும், முல்லைப்பூ கிலோ ரூ.600-க்கும், செவ்வந்தி பூ கிலோ ரூ.320க்கும் விற்பனையானது. தவிர, சம்பங்கி கிலோ ரூ.240, அரளி ரூ.400, ஜாதி பூ ரூ.800, ரோஜா ரூ.300, கலர் செவ்வந்தி ரூ.240, தாமரை ஒன்று ரூ.40, செண்டு மல்லி ரூ.80, கோழிக்கொண்டை ரூ.120, மஞ்சள் அரளி ரூ.400, மரிக்கொழுந்து ஒரு கட்டு ரூ.30, வாடாமல்லி ரூ.120-க்கு விற்பனையானது. தவிர, ஆயுத பூஜைக்கு வாழை, பொரி, கடலை, மிட்டாய், மஞ்சள், குங்குமம், விபூதி போன்றவை வாங்கவும் அதிகளவில் பொதுமக்கள் ஆர்வம்காட்டினர். இதனால், பூமார்க்கெட் பகுதியில் போக்குரத்து நெரிசல் ஏற்பட்டது.

மேலும், ஆயுத பூஜையொட்டி இன்று முதல் 24-ம் தேதி வரை 4 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால், கோவையில் இருந்து கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என பலர் தங்களின் சொந்த ஊருக்கு செல்ல காந்திபுரம் பேருந்து நிலையம், சிங்காநல்லூர் மற்றும் உக்கடம் பேருந்து நிலையங்களில் குவிந்தனர்.

பேருந்து பயணிகள் வசதிக்காக கோவையில் இருந்து சேலம், ஈரோடு, திருச்சி, மதுரை, தேனி உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. பேருந்துகளில் பயணிகள் முந்தியடித்து கொண்டு ஏறி சீட் பிடித்து சென்றனர். சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்ட போதிலும், பேருந்துகளில் அதிகளவிலான கூட்டம் காணப்பட்டது. இந்நிலையில், தேவைப்பட்டால் இன்னும் கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர். பேருந்து நிலையங்களில் பயணிகள் அதிகளவில் குவிந்ததால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை சரிசெய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

தவிர, பலர் ரயில்கள் மூலமாகவும் தங்களின் சொந்த ஊருக்கு சென்றனர். இதனால், கோவை ரயில்நிலையத்திலும் கூட்ட நெரிசல் இருந்தது. சென்னை, மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல ஆம்னி பேருந்து நிலையத்திலும் அதிகளவில் பயணிகள் குவிந்தனர். இந்நிலையில், ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பான கண்காணிப்பு பணிகளில் போக்குவரத்து துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். கூடுதல் கட்டணம் தொடர்பாக புகார் இருந்தால் உடனடியாக 93848-08304 என்ற வாட்ஸ்அப் எண்ணில் வட்டார போக்குவரத்து அலுவலருக்கு தெரிவிக்கலாம்.

The post ஆயுத பூஜையையொட்டி பூமார்க்கெட்டில் குவிந்துள்ள பூக்கள் appeared first on Dinakaran.

Related Stories: