தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் திறன் மேம்பாட்டு முனைப்புகள் குறித்த கலந்துரையாடல் கூட்டம்

சென்னை: தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி. வி. கணேசன் தலைமையில் இன்று 20.10.2023 சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள கூட்ட அரங்கில், பின்லாந்து நாட்டு கல்வி அமைச்சர் அனா மஜா ஹென்ரிக்சன் அவர்களின் முன்னிலையில் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் திறன் மேம்பாட்டு முனைப்புகள் குறித்த கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு முன்னதாக பின்லாந்து குழுவினர் அம்பத்தூர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் வழங்கப்பட்டு வரும் திறன் பயிற்சிகளை பார்வையிட்டனர்.

டாடா குழுமத்துடன் இணைந்து 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் உருவாக்கப்பட்டுள்ள தொழில் 4.0 தரத்திலான தொழில்நுட்ப மையங்களில் அம்பத்தூரில் அமைக்கப்பட்ட தொழில்நுட்ப மையத்தையும், அசோக் லேலண்ட், மாருதி சுசுகி ஆகிய நிறுவனங்கள் மூலம் அமைக்கப்பட்டுள்ள நவீன தொழில்நுட்ப பணிமனைகளையும் பார்வையிட்டார்கள். இக்கூட்டத்தில் தமிழ்நாட்டில் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உலக அளவில் தகுதியான வேலைவாய்ப்பை பெறுவதற்கு திறன் பயிற்சி வழங்குவது ஒரு முக்கிய காரணியாக திகழ்கிறது. தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்களை வறுமை நிலையிலிருந்து உயர்த்துவதற்கும், பொருளாதார பல்வகைப்படுத்துதல் மற்றும் உற்பத்தி பிரிவுகளை கொண்ட கட்டமைப்பு அமைக்கப்பட வேண்டும் என்ற நோக்குடன் தமிழ்நாட்டில் பல்வேறு திறன் மேம்பாட்டு முனைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனை செயல்படுத்தும் வகையில் தமிழ்நாட்டில் 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் இந்தாண்டு 30,200 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு அதிகபட்சமாக 94.5% சேர்க்கை பதிவு செய்யப்பட்டுள்ளது என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்கள். மேலும், தமிழ்நாட்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் வாயிலாக செயல்படுத்தப்படும் பயிற்சிகளையும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் மூலம் வழங்கப்படும் பயிற்சிகள் மற்றும் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகள் குறித்தும் இக்கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டன.

பின்னர், தமிழ்நாடு மற்றும் பின்லாந்து நாட்டு அமைச்சர்களுக்கிடையே தமிழ்நாட்டின் மாணவர்களுக்கு பின்லாந்தில் திறன் பயிற்சி மேற்கொள்வதற்கும் பின்லாந்து மாணவர்கள் தமிழ்நாட்டில் உள்ள திறன் பயிற்சிகளை பெறுவதற்கும் வழிவகை செய்யப்படும் என பரஸ்பரமாக தெரிவிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் குமார் ஜயந்த், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையர் எ.சுந்தரவள்ளி, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் மேலாண்மை இயக்குநர் ஜெ. இன்னசென்ட் திவ்யா, மற்றும் துறையின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் திறன் மேம்பாட்டு முனைப்புகள் குறித்த கலந்துரையாடல் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: