மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நிறுவிய பங்காரு அடிகளார் காலமானார்: பக்தர்கள் கண்ணீர் அஞ்சலி l தலைவர்கள் இரங்கல், அரசு மரியாதையுடன் இன்று உடல் அடக்கம்

சென்னை: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நிறுவிய பங்காரு அடிகளார் நேற்று காலமானார். அவரது மறைவு செய்தி கேட்டு, தமிழகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்துள்ளனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். பங்காரு அடிகளாரின் இறுதி சடங்கு அரசு மரியாதையுடன் இன்று மாலை நடக்கிறது. செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி பீடத்தை நிறுவி ஆன்மிக குருவாக விளங்கி வந்தவர் பங்காரு அடிகளார். கடந்த ஓராண்டாகவே அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தது.

சில மாதங்களாக வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், நேற்று மாலை 5 மணி அளவில் அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. ஆதிபராசக்தி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை 5.45 மணி அளவில் பங்காரு அடிகளாரின் உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 82. பங்காரு அடிகளார் மறைந்த தகவல் பரவியதை அடுத்து, ஆதிபராசக்தி பீடத்தின் பக்தர்களும் நிர்வாகிகளும் குடும்பத்தினரும் கதறி அழுதனர். தொடர்ந்து, ஆதிபராசக்தி சித்தர் பீடம் நடைகள் அடைக்கப்பட்டன.

ஆதிபராசக்தி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலமாக அவரது உடல் வீட்டிற்கு கொண்டுவரப்பட்டது. தகவல் அறிந்து வந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அவர் வீட்டின் முன்பு அமர்ந்து கதறி கதறி அழுதனர். பக்தர்களின் பார்வைக்காக அவரது உடல் வீட்டு முன்பு வைக்கப்பட்டுள்ளது. பங்காரு அடிகளாரின் இறுதிச் சடங்கு இன்று மாலை 4 மணியளவில் நடைபெற உள்ளது. 5.45 மணி அளவில் தியான மண்டபம் அருகில் சித்தர் முறைப்படி முக்தி செய்யப்படுகிறது. பங்காரு அடிகளாரின் சேவைகளைப் போற்றும் வகையில், அரசு மரியாதையுடன் அவரது இறுதிச்சடங்கு நடைபெறும் என்று தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த பங்காரு அடிகளாருக்கு லட்சுமி அம்மாள் என்ற மனைவியும், அன்பழகன், செந்தில் குமார் என்ற இரு மகன்களும், ஸ்ரீதேவி ரமேஷ், உமாதேவி ஜெய்கணேஷ் என்ற மகள்களும் உள்ளனர். பங்காரு அடிகளார் காலமானார் என்ற தகவல் அவரது பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடையே கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருடந்தோறும் மாலை அணிந்து விரதமிருந்து ஆதிபராசக்தி கோயிலுக்கு வந்து வழிபட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். பங்காரு அடிகளார் மறைவு செய்தி அவரது பக்தர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பக்தர்கள் மேல்மருவத்தூரை நோக்கி வர தொடங்கியுள்ளனர். பங்காரு அடிகளார் காலமான தகவல் வெளியானதும் முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கவர்னர் ஆர்.என்.ரவி, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பங்காரு அடிகளார் மறைவையொட்டி, பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடுவார்கள் என்பதால் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி டிஜிபி சங்கர் ஜிவால், சட்டம் -ஒழுங்கு ஏடிஜிபி அருண் ஆகியோரது மேற்பார்வையில் வடக்கு மண்டல ஐஜி கண்ணன், டிஐஜிக்கள் பொன்னி, முத்துசாமி மற்றும் 9 மாவட்ட எஸ்பிக்கள், 2 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பங்காரு அடிகளார் தான் இறந்தால் அடக்கம் செய்வதற்காக மேல்மருத்துவத்தூர் கோயில் அருகிலேயே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சமாதி ஒன்றை கட்டி வைத்துள்ளார். அம்மா என்று பக்தர்களால் அழைக்கப்பட்ட பங்காரு அடிகளார் ஆன்மிகத்தில் சீர்திருத்தங்களை கொண்டு வந்தார். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலில் கருவறைக்குள் பெண்கள் சென்று வழிபாடு நடத்தும் புரட்சிகரமான நடைமுறைகளை வழக்கப்படுத்தினார். இவ்வளவு சிறப்பு வாய்ந்த பங்காரு அடிகளார் 1941ம் ஆண்டு மார்ச் 3ம் தேதி கோபால நாயக்கருக்கும், மீனாம்பாள் அம்மையாருக்கும் மகனாக பிறந்தார். பங்காரு அடிகளாரின் இயற்பெயர் சுப்பிரமணி.

ஆரம்பத்தில் சோத்துப்பாக்கம் ஆரம்பப் பள்ளியில் ஆசிரியராக பணி புரிந்து வந்த அவர், 1985 சமயத்தில் மேல்மருவத்தூரில் உள்ள ஒரு மரத்தடியில் அமர்ந்து குறி சொல்லி வந்தார். அதன்பிறகு கொட்டகை அமைத்து ஆதிபராசக்தி பீடத்தை உருவாக்கினார். சில ஆண்டுகளில் அங்கு பக்தர்கள் கூட்டம் குவிய தொடங்கியது. பங்காரு அடிகளாரின் ஆன்மிக சேவையை பாராட்டி கடந்த 2019ம் ஆண்டு ஒன்றிய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருதை வழங்கி கவுரவித்தது. பங்காரு அடிகளார் ஆன்மிக குருவாக மட்டுமின்றி ஆதிபராசக்தி தொண்டு நிறுவனம், மருத்துவ கல்வி மற்றும் கலாச்சார அறக்கட்டளையின் தலைவராக இருந்தவர்.

ஆதிபராசக்தி அறக்கட்டளைக்கு சொந்தமாக பல்வேறு கல்வி நிறுவனங்கள், நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. பங்காரு அடிகளார் சிறு வயது முதலே அன்னை பராசக்தியின் மீது அதிக நாட்டமும், ஈடுபாடும் கொண்டவர். மேல்மருவத்தூரில் அன்னை ஆதிபராசக்தி சித்தர் பீடம் நிறுவுவதற்கு முன்பாகவே அடிகளாரின் பாலபருவத்தில் அன்னை நாக வடிவத்தில் அவர் மீது ஊர்ந்து செல்வதை அவருடைய தாய், தந்தையரும், அவ்வூர் மக்களும் பார்த்து பரவசம் அடைந்திருக்கிறார்கள். அடிகளார் படிப்பில் சிறந்து விளங்கி ஆசிரியர் பயிற்சி நிறைவு செய்து, அரசுப்பணி ஆசிரியராக பள்ளிக்கூடத்திலே பணியாற்றினார்.

1966ம் ஆண்டு நவம்பர் மாதம் 28ம் தேதி மேல்மருவத்தூரில், கோபால நாயக்கருக்கு சொந்தமான நிலத்தில் அமைந்த வேப்பமரமும் அதற்கு கீழே இருந்த புற்றும் சேதம் அடைந்தன. இனிப்பான, மருத்துவ குணம் கொண்ட பாலை சுரந்து வந்த வேப்ப மரம் சாய்ந்து அதற்கு அடியில் இருந்த புற்றும் கரைந்தது. அப்புற்றிலிருந்து சுயம்புவாக அன்னை ஆதிபராசக்தி வெளிப்பட்டாள். அதே நேரத்தில், வீட்டிலிருந்த பங்காரு அடிகளார் தன்னுடைய அருள் நிலைக்கு ஆட்கொண்ட அன்னை ஆதிபராசக்தி, அவரை இல்லத்திலிருந்து உருள் வலம் (அங்கப்பிரதட்சணம்) செய்ய வைத்து இப்போதைய மேல்மருவத்தூர் சித்தர் பீடம் அமைந்திருக்கும் இடம் வரை அங்கவலமாகவே வரவைத்திருக்கிறாள்.

அடிகளார் அங்கே எழுந்து நின்று அந்த சுயம்புவாக வெளிப்பட்டது அன்னை ஆதிபராசக்தி தான் என்பதை அருள்வாக்கின் மூலம் உணர்த்தியிருக்கிறார். அங்கே சிறிய கோயிலை எழுப்பிய கோபால நாயக்கர் தினந்தோறும் இயன்ற வழிபாட்டினை செய்து வந்தார். அன்னை ஆதிபராசக்தியின் அருள்வாக்கு உலகமெங்கும் பிரசித்தி பெற்று பல லட்சக்கணக்கான பக்தர்களை தன்பால் ஈர்த்தது.அன்னை ஆதிபராசக்தியை வழிபடுவதற்கு பெண்கள் கருவறைக்குள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள்.

“ஒரே தாய்! ஒரே குலம்! ஒரே குணம்! ஒரே செயல்!” என்று தன் ஆன்மிகப் பாதையை வகுத்துக் கொண்டு அதன் அடிப்படையில், செவ்வாடை உடுத்தி, தன்னுடைய பக்தர்கள் அனைவரும் எவ்வித ஜாதி, மத, இன, மொழி பேதமின்றி அன்னையை வழிபடுவதற்கு அடிகளார் வழிகாட்டியாக விளங்கினார். “உலகமெலாம் சக்தி நெறி ஓங்க வேண்டும்! ஒவ்வொருவர் மனக்குறையும் நீங்க வேண்டும்” என்ற உயர்ந்த கோட்பாட்டினை அடிகளார் வலியுறுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

* மதுராந்தகம் கோட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
பங்காரு அடிகளார் மறைவையொட்டி மதுராந்தகம் கோட்டத்திற்கு உட்பட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் மறைவையொட்டி மாவட்ட ஆட்சித் தலைவர் ராகுல் நாத் விடுத்துள்ள அறிக்கையில், ‘‘இன்று வெள்ளிக்கிழமை 20.10.2023 மதுராந்தகம் கோட்டத்திற்கு உட்பட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை’’ என கூறப்பட்டுள்ளது.

The post மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நிறுவிய பங்காரு அடிகளார் காலமானார்: பக்தர்கள் கண்ணீர் அஞ்சலி l தலைவர்கள் இரங்கல், அரசு மரியாதையுடன் இன்று உடல் அடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: