கிரிப்டோ கரன்சி மோசடி வழக்கில் கட்டப்பஞ்சாயத்து ரூ.25 லட்சம் மிரட்டி பறித்த பாஜ மாநில நிர்வாகி கைது: கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்

திருவிடைமருதூர்: கிரிப்டோ கரன்சி மோசடி வழக்கில் கட்டப்பஞ்சாயத்து செய்து ரூ.25 லட்சம் மிரட்டி பறித்த பாஜ மாநில நிர்வாகியை போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அடுத்த பழவாத்தான்கட்டளை ஊராட்சி விவேகானந்தர் நகரை சேர்ந்தவர் அர்ஜூன்கார்த்தி. இவர், அந்த பகுதியில் ஸ்ரீசாயி கிரிப்டோ கரன்சி கன்சல்டன்சி என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வந்தார். இந்த நிறுவனத்தில் பணம் செலுத்தி ஏமாந்து விட்டதாக நாச்சியார்கோவில் காவல் நிலையத்தில் திருவாரூர் மாவட்டம், பூதமங்கலத்தை சேர்ந்த நூருல்அமீன் என்பவர் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், திருவாரூர் மாவட்டம் அத்திக்கடையை சேர்ந்த ஏராளமானோர் பணம் செலுத்தி ஏமாந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து அர்ஜுன்கார்த்தி (45), இவரது நிறுவன கணக்காளராக இருந்த பிரான்சிஸ் மனைவி இவாஞ்சலின் அபிலாதரஸ் (28), நிறுவன பங்குதாரர் கோவிந்தபுரம் ராஜா (65), இவரது மகன் செல்வக்குமார் (25) ஆகிய 4 பேரை கடந்த 13ம் தேதி கைது செய்தனர். இந்த வழக்கில் அர்ஜுன் கார்த்திக்கிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், தன்னிடம் பார்ட்னராக இருந்த விக்னேஷ் முதலில் டிரைவர் வேலைக்கு சேர்ந்தார்.

பின்னர் பங்குதாரராகி ரூ.1.75 கோடி மோசடி செய்ததும், இதையறிந்த கும்பகோணம் அருகே சாக்கோட்டையை சேர்ந்த பாஜ ஓபிசி அணி மாநில செயலாளர் கார்த்திகேயன் (32), தன்னை மிரட்டி விக்னேஷ் மீது உள்ள புகாரை வாபஸ் பெற வேண்டும் என்றும், தனக்கு ரூ.25 லட்சம் மற்றும் கார் தர வேண்டும் என கேட்டு கட்ட பஞ்சாயத்து செய்து வாங்கியதாகவும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கார்த்திகேயனை நேற்றுமுன்தினம் இரவு போலீசார் கைது செய்ததினர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘கார்த்திகேயன் மீது கொலை, கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் இருப்பதும், நாச்சியார்கோயில் மற்றும் தாலுகா காவல் நிலையங்களில் ரவுடி பட்டியலில் அவரது பெயர் இருப்பதும் தெரிய வந்துள்ளது. இதுதவிர தன் வீட்டுக்கு பின்புறமுள்ள இடத்தை தன் பெயருக்கு இலவசமாக மாற்றி தரும்படி உரிமையாளரை கார்த்திகேயன் மிரட்டியது தொடர்பாக கடந்த ஏப்ரல் 27ம்தேதி கார்த்திகேயன் வீட்டுக்கு சென்று விசாரித்த போது அவரது வீட்டில் இருந்து வெடிபொருட்கள் மற்றும் பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தனர். கிரிப்டோ கரன்சி மோசடி வழக்கில் தலைமறைவாக உள்ள பங்குதாரர் விக்னேஷை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

The post கிரிப்டோ கரன்சி மோசடி வழக்கில் கட்டப்பஞ்சாயத்து ரூ.25 லட்சம் மிரட்டி பறித்த பாஜ மாநில நிர்வாகி கைது: கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர் appeared first on Dinakaran.

Related Stories: