சந்திரயான் திட்டங்களுக்கு பங்களித்த தமிழ்நாடு விஞ்ஞானிகளை பாராட்டியதற்காக முதல்வருக்கு நன்றி கூறினேன்: சோம்நாத் பேட்டி

சென்னை: சந்திரயான் திட்டங்களுக்கு பங்களித்த தமிழ்நாடு விஞ்ஞானிகளை பாராட்டியதற்காக முதல்வருக்கு நன்றி கூறினேன் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கிருந்து ராக்கெட் ஏவப்பட்டால், பொருளாதார ரீதியாக இது மிகப் பெரிய லாபகரமாக அமையும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

ஸ்ரீஹரிகோட்டாவில் சிறிய ராக்கெட்டுகளை ஏவும் போது அவை, இலங்கையை சுற்றிச் செல்ல வேண்டி இருக்கிறது. இதனால் குலசேகரன்பட்டினத்தில் ஏவுதளம் அமைக்கப்பட்டால் அது நேரடியாக விண்வெளிக்கு சென்றடையும். எஸ்.எஸ்.எல்.வி. போன்ற சிறிய வகை ராக்கெட்களுக்கு குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் பயனுள்ளதாக இருக்கும்.

2 வருடங்களில் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு ராக்கெட் ஏவுதளம் பயன்பாட்டிற்கு வரும். இந்நிலையில் இன்று சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இஸ்ரோ தலைவர் சோம்நாத் சந்தித்தார். பின்னர் சந்திப்பு குறித்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் சந்திரயான் திட்டங்களுக்கு பங்களித்த தமிழ்நாடு விஞ்ஞானிகளை பாராட்டியதற்காக முதல்வருக்கு நன்றி கூறினேன்.

இஸ்ரோ திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக முதல்வர் உறுதியளித்தார். இஸ்ரோவுக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு தருகிறது. குலசேகரப்பட்டினம் திட்டத்திற்கு தமிழக அரசு உதவியாக இருக்கிறது. சிறிய ராக்கெட்டுகளை குலசேகரப்பட்டினத்தில் இருந்து ஏவ முடியும். சந்திரயான்-3 திட்டத்தின் மாதிரியை முதல்வர் ஸ்டாலின் நினைவுப் பரிசாக அளித்தேன் என அவர் தெரிவித்துள்ளார்.

The post சந்திரயான் திட்டங்களுக்கு பங்களித்த தமிழ்நாடு விஞ்ஞானிகளை பாராட்டியதற்காக முதல்வருக்கு நன்றி கூறினேன்: சோம்நாத் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: