டெல்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம் தொடங்கியது; காவிரியில் வினாடிக்கு 16,000 கனஅடி நீர் திறக்க தமிழகம் சார்பில் வலியுறுத்தல்..!!

டெல்லி: டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 26வது கூட்டம் தொடங்கியது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க கர்நாடகம் தொடர்ந்து மறுத்து வரும் நிலையில், காவிரியில் நீர் திறக்க கர்நாடகாவுக்கு ஒன்றிய அரசு உத்தரவிட வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனிடையே, காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 88வது கூட்டம் டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இதில் வரும் 16ம் தேதி முதல் 31ம் தேதி வரை காவிரியில் வினாடிக்கு 3,000 கனஅடி நீர் திறந்துவிட காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்திருந்தது. நேற்று முன்தினம் பரிந்துரைத்த நிலையில் காவிரி மேலாண்மை ஆணையம் இன்று கூடியது. காவிரி மேலாண்மை ஆணைய அவசரக் கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நடைபெற்று வருகிறது.

கூட்டத்தில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி மாநில அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். காவிரியில் நீர் திறந்துவிட கர்நாடகா மறுத்துவிட்ட நிலையில், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் கூடியுள்ளது. காவிரியில் வினாடிக்கு 16,000 கனஅடி நீரை திறந்துவிட தமிழ்நாடு சார்பில் வலியுறுத்தப்பட உள்ளது. தமிழ்நாட்டிற்கு உரிய நீரை பெற தொடர்ந்து போராடுவோம் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உறுதி அளித்திருப்பது நினைவுகூரத்தக்கது.

The post டெல்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம் தொடங்கியது; காவிரியில் வினாடிக்கு 16,000 கனஅடி நீர் திறக்க தமிழகம் சார்பில் வலியுறுத்தல்..!! appeared first on Dinakaran.

Related Stories: