சபாநாயகர் பரபரப்பு பேட்டி

புதுச்சேரி, அக். 13: சந்திர பிரியங்கா ராஜினாமா செய்யவில்லை. முதல்வர் ரங்கசாமியால் நீக்கம் செய்யப்பட்டார் என சபாநாயகர் செல்வம் கூறினார். “என் மண் என் தேசம்” எனும் கருத்தை வலியுறுத்தி புதுவையில் ஊர்வலம் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற பின் சபாநாயகர் செல்வம் கூறுகையில், புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த சந்திர பிரியங்கா தனது துறைகளை சரிவர கவனிக்காததால் கடந்த வாரம் முதல்வர் ரங்கசாமி அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி அதற்கான கடிதத்தை துணைநிலை ஆளுநரிடம் கொடுத்தார்.இதை அறிந்து கொண்ட அமைச்சர் சந்திர பிரியங்கா ராஜினாமா செய்வதாக நேற்று முன்தினம் கடிதம் கொடுத்துள்ளார்.அவர் ராஜினாமா செய்யவில்லை. அவரது செயல்பாடுகள் சரியில்லாத காரணத்தாலேயே அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த ஆட்சியில் பாலின பாகுபாடு யாரிடமும் இல்லை. அமைச்சராக இருந்தபோது சந்திரபிரியங்கா சிறப்பாக செயல்படவில்லை. ஒரு அமைச்சரை நீக்குவதற்கு முதல்வருக்கு உரிமை உண்டு. அவர் ராஜினாமா செய்வதற்கு கூறியுள்ள காரணங்கள் கண்டிக்கத்தக்கது. ஏற்றுக் கொள்ள முடியாது. சந்திர பிரியங்காவை முதல்வர் அழைத்து அறிவுரை கூறியும், அவரது துறைகளை திறம்பட கவனிக்கவில்லை. புதிய அமைச்சர் நியமனம், இலாகா மாற்றம் குறித்து முதல்வர் முடிவு செய்வார். யாரை அமைச்சராக நியமிக்க வேண்டும், யாரை நீக்க வேண்டும் என்பது முதல்வரின் தனிப்பட்ட உரிமை என்றார்.

The post சபாநாயகர் பரபரப்பு பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: