நீலகிரியில் மொட்டு காளான் உற்பத்தி அதிகரிப்பு

ஊட்டி: புரட்டாசி மாதம் என்பதால், நீலகிரி மாவட்டத்தில் மொட்டு காளான் உற்பத்தி அதிகரித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால், மாற்றுப் பயிருக்கு பல விவசாயிகள் மாறி வருகின்றனர். இதில், பலரும் மலர் சாகுபடியில் இறங்கியுள்ளனர். ஆனால், மலர்களை சந்தைப்படுத்துவதில் உள்ள சிக்கல்களால், பட்டன் மஷ்ரூம் எனப்படும் மொட்டு காளான் உற்பத்தியில் கவனம் செலுத்தி வருகின்றனர். மகளிர் குழுக்களும் காளான் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.

நீலகிரியில் காளான் உற்பத்தி செய்ய ஏற்ற காலநிலை உள்ளது. இதனால், குளிர் பிரதேசமான நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி மற்றும் குன்னூர் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் குடில் அமைத்து காளான் உற்பத்தி செய்கின்றனர். நீலகிரியில் காளான் இயற்கை முறையிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றன. சமவெளி பகுதிகளைபோல செயற்கையாக குளிர்ச்சியான தட்பவெப்பநிலையை ஏற்படுத்தி உற்பத்தி செய்யப்படுவதில்லை. இதனால், நீலகிரி காளான்கள் 2 நாட்கள் வரையில் கெட்டு போவதில்லை. இயற்கையாக விளையும் நீலகிரி காளானுக்கு வைக்கோல், கோழி எரு என இடுபொருட்களை சமவெளிப் பகுதிகளிலிருந்து கொண்டுவர வேண்டும் என்பதால், உற்பத்திச்செலவு அதிகம். இங்கு உற்பத்தி செய்யப்படும் முதல் மற்றும் இரண்டாம் தர காளான்கள் தென்னிந்தியாவின் முக்கிய நகரங்களான சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பப்படுகின்றன.

இதுதவிர திருமணம், கட்சி கூட்டங்கள் போன்றவற்றில் சைவம் உண்பவர்களுக்காக காளான் பிரியாணி, காளான் சில்லி போன்றவை தயாரிக்க நேரடியாக உற்பத்தி செய்யும் இடங்களில் இருந்தே மொத்தமாக வாங்கி செல்கின்றனர். கொரோனா காலகட்டத்தில் ஊரடங்கு காரணமாக காளான் உற்பத்தி செய்து வெளி மாவட்டங்களுக்கு அனுப்ப முடியாமல் போனதால், உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டனர். கொரோனா தொற்று முடிவுக்கு வந்த பின் மீண்டும் உற்பத்தி துவக்கப்பட்டு பழையபடி விற்பனை செய்யப்படுகிறது. தற்போது புரட்டாசி மாதம் என்பதால், பலரும் அசைவம் சாப்பிடுவதை தவிர்த்து விரதம் இருந்து வருகின்றனர். அவர்கள் அசைவத்திற்கு பதிலாக தாதுப் பொருளான `செலினியம்’ சத்து கொண்ட காளானை அதிகளவு விரும்பி சாப்பிடுகின்றனர். இதனால் இம்மாதத்தில் காளான் விற்பனை அதிகரித்துள்ளது என காளான் உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

The post நீலகிரியில் மொட்டு காளான் உற்பத்தி அதிகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: