முகூர்த்த நாள் எதிரொலி!: ராஜஸ்தான் மாநில சட்டமன்ற தேர்தல் நவ.25ம் தேதிக்கு மாற்றம்.. தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவு..!!

டெல்லி: ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதியை மாற்றம் செய்து தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சட்டசபை பதவிக்காலம் நிறைவடைய உள்ள 5 மாநிலங்களின் தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்தார். அதன்படி, மிசோரம் மாநிலத்திற்கு நவம்பர் 7ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சத்தீஷ்கர் மாநிலத்திற்கு நவம்பர் 7 மற்றும் 17ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மத்தியப்பிரதேசத்திற்கு நவம்பர் 17ம் தேதியும், ராஜஸ்தானுக்கு நவம்பர் 23ம் தேதியும், தெலங்கானாவுக்கு நவம்பர் 30ம் தேதியும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதியை மாற்றம் செய்து தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

நவம்பர் 23ம் தேதி நடைபெற இருந்த ராஜஸ்தான் மாநில சட்டமன்ற தேர்தல் நவம்பர் 25ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை தேதி மாற்றமின்றி டிசம்பர் 3ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நவம்பர் 23ம் தேதி அதிக திருமணங்கள் நடைபெறும் முகூர்த்த நாள் என்பதால் தேர்தல் தேதி மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. முகூர்த்த நாளில் தேர்தல் நடைபெறுவது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் என்பதால் தேர்தல் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post முகூர்த்த நாள் எதிரொலி!: ராஜஸ்தான் மாநில சட்டமன்ற தேர்தல் நவ.25ம் தேதிக்கு மாற்றம்.. தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவு..!! appeared first on Dinakaran.

Related Stories: