ஆற்காடு அருகே குடியிருப்பு பகுதியில் மருத்துவ கழிவுகளை கொட்டிய வாகனம் சிறை பிடிப்பு

*பொதுமக்கள் போராட்டம்

ஆற்காடு : ஆற்காடு அருகே குடியிருப்பு பகுதியில் மருத்துவ கழிவுகளை கொட்டிய வாகனத்தை பொதுமக்கள் சிறைபிடித்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த தாஜ்புரா ஊராட்சி சத்யா நகர் குடியிருப்பு பகுதியில் டெல்லியில் உள்ள மருத்துவ கழிவுகளை தரம் பிரிக்கும் தனியார் நிறுவனம் குடோன் வாடகைக்கு எடுத்து கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் மருத்துவ கழிவுகளை சேகரித்து வருகிறது.

மேலும் 12 பேரை அங்கு வேலைக்கு வைத்து அனைத்து கழிவுகளையும் தரம் பிரிப்பதாக தெரிகிறது. மேலும், இங்கு பிரபல தனியார் மருத்துவமனையின் மருத்துவ கழிவுகளை தினமும் 7 லோடுகள் வேனில் கொண்டு வந்து தரம் பிரிப்பதாக கூறப்படுகிறது. இந்த மருத்துவ கழிவுகள் டன் கணக்கில் அங்கு வைத்திருப்பதால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே அங்கு மருத்துவக் கழிவுகளை கொண்டு வந்து கொட்டி தரம் பிரிக்க கூடாது என பகுதி பொதுமக்கள் பலமுறை வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், நேற்று மாலை லோடு வேன் மூலம் மருத்துவக் கழிவுகளை சத்யா நகர் பகுதியில் உள்ள தனியார் குடோனுக்கு கொண்டு வந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த தாஜ்புரா ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி சேட்டு தலைமையில் 25க்கும் மேற்பட்டோர் அங்கு சென்று அந்த வாகனத்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்த தகவலறிந்த ஆற்காடு தாலுகா சப் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களை சமாதானம் செய்தனர். அப்போது அந்த குடோனில் உள்ள மருத்துவக் கழிவுகள் முழுவதையும் அப்புறப்படுத்த வேண்டும். அந்த குடோன் தொடர்ந்து செயல்படக் கூடாது. இங்கு மருத்துவ கழிவுகளை கொண்டு வந்து சேகரித்து வைத்து சுகாதார சீர்கேடு ஏற்படுத்திய தனியார் நிறுவனம் உள்ளிட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

அதனைத் தொடர்ந்து போலீசார் அவர்களை சமாதானம் செய்ததை தொடர்ந்து லோடு வேனை விடுவித்தனர். அதனைத் தொடர்ந்து லோடு வேனையும், அதன் டிரைவர் வேப்பூர் காந்திநகரைச் சேர்ந்த நிர்மல் (24) என்பவரையும் ஆற்காடு தாலுகா காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் தனியார் நிறுவனத்தின் மேலாளர் வேலூர் சத்துவாச்சாரி பாலாஜி நகரைச் சேர்ந்த சந்தோஷ் என்பவரை வரவழைத்து இதுகுறித்து விசாரணை செய்தனர்.
அப்போது மருத்துவ கழிவுகளை அங்கிருந்து அப்புறப்படுத்திவிட்டு விரைவில் குடோனை காலி செய்து விடுவதாக சம்பந்தப்பட்டவர்கள் கூறியதன் பேரில் வேன் மற்றும் அதன் டிரைவரை போலீசார் விடுவித்தனர். இச்சம்பவம் தாஜ்புரா சத்யா நகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post ஆற்காடு அருகே குடியிருப்பு பகுதியில் மருத்துவ கழிவுகளை கொட்டிய வாகனம் சிறை பிடிப்பு appeared first on Dinakaran.

Related Stories: