பெருந்துறை சிப்காட் ஆலையில் விதிமீறி வெளியேற்றப்படும் கழிவுகள்!: சுவாசகோளாறு, தோல்நோய் ஏற்படுவதாக மக்கள் குமுறல்..!!

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் ஆலை கழிவுகள் விதிகளை மீறி வெளியேற்றப்படுவதால் சுற்றுவட்டார மக்கள் பல்வேறு நோய் பாதிப்புக்கு ஆளாவதாக புகார் எழுந்துள்ளது. விதிகளை மீறி கழிவுகளை வெளியேற்றும் ஆலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆசியாவில் உள்ள மிகப்பெரும் தொழிற்பேட்டைகளில் ஒன்று பெருந்துறை தொழில் மையம். 2700 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பெருந்துறை சிப்காட் ஆலைகளால் தொழிற்வளர்ச்சி அடைந்து வேலை வாய்ப்பு பெருகும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் நிலம் கொடுத்தனர்.

ஆனால் ஆலைகள் விதிகளை மீறி வெளியேற்றி வரும் கழிவுகளால் எழுதியங்கட்பட்டி, குட்டப்பாளையம், குமரபாளையம், ஈங்கூன், வாய்ப்பாடி, வரப்பாளையம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலம், நீர், காற்று மாசடைந்து பொதுமக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். நச்சுத்தன்மைமிக்க ரசாயனங்களால் விளை நிலங்கள் தரிசாக மாறியதுடன் சுவாசக்கோளாறு, தோல் நோய், புற்றுநோய் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

சிப்காட் கழிவுகளால் ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளும் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் அவர்கள் குமுறுகின்றனர். சிப்காட் வளாகத்தில் 52 சாய ஆலைகள் உட்பட 157 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இவை கழிவுநீரை சுத்திகரித்து மீண்டும் பயன்படுத்திக் கொள்வதுடன் 1 சொட்டு கழிவுநீரை கூட வெளியேற்றக்கூடாது என்பது விதிமுறையாகும். இவற்றை பின்பற்றாத சாய ஆலைகள், தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

The post பெருந்துறை சிப்காட் ஆலையில் விதிமீறி வெளியேற்றப்படும் கழிவுகள்!: சுவாசகோளாறு, தோல்நோய் ஏற்படுவதாக மக்கள் குமுறல்..!! appeared first on Dinakaran.

Related Stories: