தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: வைகோ வலியுறுத்தல்

சென்னை: தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதுதான் எங்களுடைய கருத்து என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள தாயகத்தில் மதிமுக உருவாவதற்காக தங்கள் உயிர்களைக் கொடையாக தந்த நொச்சிப்பட்டி தண்டபாணி, இடிமழை உதயன், மேலப்பாளையம் ஜஹாங்கீர், உப்பிலியாபுரம் வீரப்பன், கோவை காமராசபுரம் பாலன் ஆகியோரின் நினைவு நாளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைப்பெற்றது. மதிமுக பொது செயலாளர் வைகோ கலந்துகொண்டு வீரவணக்கம் செலுத்தினார். மதிமுக துணை பொது செயலாளர் மல்லை சத்யா, மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நிருபர்களிடம் கூறியதாவது : சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதுதான் எங்களுடைய கருத்தும் அரசினுடைய கருத்தும். 13 கோடி மக்கள் தொகை உள்ள பீகாரில் முடித்து விட்டார்கள். அமைச்சர் துரைமுருகன், தமிழ்நாட்டு எம்பிக்கள் என அனைவரும் ஒன்றிணைந்து ஒன்றிய அமைச்சரை சந்தித்தோம். கர்நாடக அரசிற்கு அழுத்தம் கொடுக்கும் அதே நேரத்தில் உச்ச நீதிமன்றமும் காவிரி மேலாண்மை குழுவும் தமிழகத்துக்கு தண்ணீர் தர வேண்டும் என்று சொல்லியும் கூட கர்நாடக அரசு அதனை ஒரு பொருட்டாக கருதவில்லை. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையே கண்டுகொள்ளவில்லை. மூன்றரை லட்சம் பயிர்கள் கருகிக் கொண்டிருக்கின்ற துயரமான சூழ்நிலையில் தமிழ்நாடு இருந்து கொண்டிருக்கிறது. இதிலே ஒரு மனதாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறது.

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடி முகவர்களை தேர்ந்தெடுக்கும் வகையில் மாவட்ட வாரியாக கூட்டம் நடைபெறுகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கு தொகுதி பங்கீடு குறித்து திமுகவுடன் இன்னும் பேச்சுவார்த்தை தொடங்கவில்லை. இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது என்றார்.

 

The post தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: வைகோ வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: