கேளம்பாக்கத்தில் உள்ள ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை

திருப்போரூர்: கேளம்பாக்கத்தில் உள்ள ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். வளர்ச்சி அடைந்து வரும் புறநகர் பகுதியான படூர், கேளம்பாக்கம் பகுதிகளில் ஓட்டல்கள், சிறு உணவகங்கள், நட்சத்திர விடுதிகள் என அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மாமல்லபுரத்தில் உள்ள ஓட்டல் ஒன்றில் பிரியாணி சாப்பிட்ட 10 பேருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதையடுத்து, மாவட்டம் முழுவதும் உள்ள ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு கட்டுப்பாட்டு விதிகள் பின்பற்றப்படுகிறதா என சோதனை செய்யுமாறு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து, நேற்று கேளம்பாக்கம் பகுதிகளில் உள்ள ஓட்டல்களில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அனுராதா தலைமையில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். ஓஎம்ஆர் சாலையில் உள்ள பிரபல கேக் தயாரிக்கும் நிறுவனம், பிரியாணி கடை, சிக்கன் கடைகள், ஓட்டல்களில் அதிகாரிகள் சென்று திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில், ஓட்டல் ஒன்றில் கெட்டுப்போன இறைச்சிகள், நெத்திலி மீன்கள், சிக்கன்கள் போன்றவை பிரிட்ஜில் வைக்கப்பட்டிருந்தன.

அதுமட்டுமின்றி அசைவ மற்றும் சைவ உணவுப் பொருட்கள் இரண்டும் ஒரே அடுக்கில் வைக்கப்பட்டிருந்தன. இவற்றை பார்த்த அதிகாரிகள், இதுபோல பழைய உணவுப்பொருட்களை பிரிட்ஜில் வைத்து அவற்றை மீண்டும் சூடாக்கி தரக்கூடாது என்று கூறி அவற்றை குப்பைத் தொட்டியில் கொட்டினர். உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்து கொண்டிருந்தபோது, அவ்வழியே சென்ற திருப்போரூர் எம்எல்ஏ பாலாஜி தனது வண்டியை நிறுத்திவிட்டு அதிகாரிகளுடன் சென்று சில ஓட்டல்களின் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, நம்பிக்கையுடன் உணவு உண்ண வரும் மக்களை ஏமாற்றாமல் தரமாக உணவு சமைத்து பரிமாறுங்கள், அவர்கள் கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு கொடுங்கள் என்று உணவக உரிமையாளர்களை எம்எல்ஏ கேட்டுக்கொண்டார்.

The post கேளம்பாக்கத்தில் உள்ள ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை appeared first on Dinakaran.

Related Stories: