பாங்காக்: மியான்மர் நாட்டில் பொதுமக்கள் முகாம் மீது அந்நாட்டு ராணுவம் குண்டு வீசி தாக்கியதில் 13 குழந்தைகள் உள்பட 19 பேர் பரிதாபமாக பலியானார்கள். மியான்மரில் கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரியில் நடந்த தேர்தலில் ஆங்சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால், தேர்தலில் முறைகேடு நடந்ததாக கூறிய ராணுவம் ஆட்சிப்பொறுப்பை கைப்பற்றியது. ராணுவ ஆட்சியை எதிர்த்த பொதுமக்கள் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டனர். ராணுவத்துக்கு எதிராக ஜனநாயக மக்கள் படை என்ற ஆயுதமேந்திய குழுவும், கச்சின் பகுதி சிறுபான்மை இனமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், ராணுவத்துக்கு பயந்து வீடுகளை விட்டு, இடம் பெயர்ந்த பொதுமக்கள் மியான்மரின் லைசா நகருக்கு அருகில் முங்லை ஹையெட் பகுதியில் உள்ள கூடாரத்தில் தங்கியிருந்தனர். நேற்று முன் தினம் இரவு 11 மணியளவில் திடீரென அங்கு வந்த ராணுவ ஜெட் விமானம் கூடாரத்தின் மீது குண்டு வீசியது. அதில் கூடாரத்தில் தூங்கிக்கொண்டிருந்த 13 குழந்தைகள் உள்பட 19 பேர் பரிதாபமாக பலியாயினர்.
The post பொதுமக்கள் முகாம் மீது மியான்மர் ராணுவம் குண்டு வீச்சு: 13 குழந்தைகள் உள்பட 19 பேர் பரிதாப பலி appeared first on Dinakaran.