சோழிங்கநல்லூரில் துணிகர சம்பவம் பிரபல வங்கியில் 54 சவரன் திருடிய பெண் தூய்மை பணியாளர் கைது: அதிகாரிகள் நம்பிக்கையை பயன்படுத்தி 4 மாதங்களாக சிறுக சிறுக கைவரிசை

துரைப்பாக்கம்: வங்கியில் வாடிக்கையாளர்கள் அடகு வைத்த 54 சவரன் நகைகள் திருடுபோன வழக்கில், அதே வங்கியில் தூய்மை பணியாளராக பணியாற்றிய பெண்ணை போலீசார் கைது செய்தனர். அதிகாரிகளின் நம்பிக்கையை பயன்படுத்தி இவர், தொடர்ந்து 4 மாதங்களாக சிறுக சிறுக கைவரிசை காட்டியது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. சோழிங்கநல்லூர் ராஜிவ்காந்தி சாலையில் பிரபல தனியார் வங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு, கடந்த 6ம் தேதி வாடிக்கையாளர் ஒருவர், தான் அடகு வைத்த நகைகளை மீட்க வந்துள்ளார். அப்போது, லாக்கரில் வைக்கப்பட்ட அவரது நகைகளை வங்கி அதிகாரிகள் சரிபார்த்தபோது, அதில் சில நகைகள் குறைந்தது தெரியவந்தது.

இதனால், அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், வங்கியில் வாடிக்கையாளர்கள் அடகு வைத்த அனைவரின் நகைகளையும் சரிபார்த்தனர். அதில், 24 வாடிக்கையாளர்கள் அடகு வைத்த நகைகளில் மொத்தம் 54 சவரன் நகைகள் மாயமானது தெரிந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த வங்கி மேலாளர், இதுகுறித்து கிண்டி மண்டல மேலாளருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், மண்டல மேலாளர் பங்கிம் கபூர், செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் ஐயப்பன், ராஜி, தலைமை காவலர்கள் சையது அப்சர், யாசர், முதல் நிலை காவலர்கள் நித்தியானந்தம், ரவி உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படை போலீசார் விசாரணையை தொடங்கினர்.

முதற்கட்டமாக, வங்கி ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில், வாடிக்கையாளர்கள் நகைகளை அடகு வைக்கும்போது, அவை உண்மையான தங்க நகையா என்பதை பரிசோதித்த பின்னர், பிளாஸ்டிக் கவரில் நகைகளை போட்டு சீல் வைத்து, லாக்கரில் வைப்பது வழக்கம் என ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, வங்கியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், இந்த வங்கியில் தூய்மை பணியாளராக பணிபுரியும் கண்ணகி நகரை சேர்ந்த லூர்து மேரி (39) மீது சந்தேகம் எழுந்தது. அவரை பிடித்து விசாரித்தபோது, முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார். போலீசாரின் தீவிர விசாரணையில், அவர்தான் நகைகளை திருடியது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது:

ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள தனியார் நிறுவனம் மூலம், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன், இந்த வங்கியில் தூய்மை பணியாளராக சேர்ந்த லூர்து மேரி, வங்கியை தூய்மைப்படுத்தும் வேலை போக, வங்கி ஊழியர்களுக்கு டீ, காபி வாங்கி வருவதையும், அங்குள்ள பைல்களை ஒருவரிடம் இருந்து மற்றவரிடம் கொடுப்பது உள்ளிட்ட பணிகளையும் செய்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் யார் என்ன வேலை சொன்னாலும், யார் உதவி கேட்டாலும் உடனடியாக செய்து வந்ததால், அவர் மீது வங்கி மேலாளர், ஊழியர்கள் என அனைவரும் அளவுக்கு அதிகமான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 4 மாதங்களாக வங்கியில், வாடிக்கையாளர்கள் அடகு வைத்த நகைகளை சரிபார்த்து, அதை கவரில் போடும் பணியையும் லூர்து மேரி செய்து வந்துள்ளார். மேலும், வாடிக்கையாளர்கள் அடகு வைத்த நகைகளை, லாக்கரில் வைப்பதற்கு முன், பிளாஸ்டிக் பையில் மொத்தமாக வைக்கப்படும் நகைகளில் இருந்து ஒரு நகையை, வங்கி ஊழியர்களுக்குத் தெரியாமல் லூர்து மேரி ஆரம்பத்தில் திருட ஆரம்பித்துள்ளார். இதை யாரும் கண்டுபிடிக்காததால், கடந்த ஏப்ரல் மாதம் முதல் வாடிக்கையாளர்களின் தங்க நகைகளை சிறுக சிறுக திருட ஆரம்பித்த லூர்துமேரி அடுத்தடுத்து தொடர்ந்து 4 மாதங்களாக 24 வாடிக்கையாளர்கள் அடகு வைத்த 54 சவரன் நகைகளை திருடிச் சென்றது தெரிய வந்தது.

திருடிய நகைகளை ராஜிவ்காந்தி சாலையில் உள்ள தனியார் நகைக்கடன் நிறுவனத்தில் அடகு வைத்து, அவர் லட்சக்கணக்கில் பணம் பெற்றுள்ளார். இப்படி சம்பாதித்த மொத்த பணத்தையும் அவர் சோழிங்கநல்லூர் பகுதியை சேர்ந்த பாரதி என்ற பெண்ணிடம் கொடுத்துள்ளார். கந்து வட்டிக்கு பாரதியிடம் வாங்கிய ரூ.2.50 லட்சத்திற்கு, அவர் பல லட்சம் வட்டி கேட்டதால், நகை திருட்டில் சம்பாதித்த அனைத்து பணத்தையும் அவரிடம் கொடுத்து விட்டதாக லூர்துமேரி தெரிவித்துள்ளார். இதனையடுத்து லூர்து மேரி திருடிய 54 சவரன் தங்க நகைகளை சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்திடம் இருந்து போலீசார் மீட்டனர். பின்னர், லூர்து மேரியை நேற்று முன்தினம் கைது செய்து ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். வங்கியில் தூய்மை பணியாளராக பணியாற்றிய பெண், தொடர்ந்து 4 மாதங்களாக வாடிக்கையாளர்கள் அடகு வைத்த நகைகளை திருடி லட்சக்கணக்கில் மோசடி செய்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post சோழிங்கநல்லூரில் துணிகர சம்பவம் பிரபல வங்கியில் 54 சவரன் திருடிய பெண் தூய்மை பணியாளர் கைது: அதிகாரிகள் நம்பிக்கையை பயன்படுத்தி 4 மாதங்களாக சிறுக சிறுக கைவரிசை appeared first on Dinakaran.

Related Stories: