ஆசிரியர்கள் மீது அக்கறை இருப்பதுபோல் நீலிக்கண்ணீர் வடிக்கும் எடப்பாடி பழனிசாமி: மாநில தலைவர் தியாகராஜன் கண்டனம்

சென்னை: தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் கு.தியாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி இருந்தபோது ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல கட்ட போராட்டம் நடத்தியபோது அழைத்து பேச மனமின்றி, போராட்டங்களை கொச்சைப்படுத்தி ஊடகங்களில் செய்தி வெளியிட்டு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழிகாட்டுதலுடன் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவமானப்படுத்தினார்.

தற்போது ஆசிரியர்கள் கோரிக்கைக்காக போராடும் சூழலில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நீலிக்கண்ணீர் வடித்திருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் எடப்பாடி பழனிசாமி ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென்று ஊடகங்கள் வாயிலாக செய்தி வெளியிட்டுள்ளார். ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுத கதையாக உள்ளது. தற்போது நடைபெறும் போராட்டங்கள் அனைத்திற்குமே அதிமுகதான் காரணம்.அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது பல்வேறு போராட்டங்களை சேப்பாக்கத்தில் நடத்தியபோது எடப்பாடி பழனிச்சாமி கண்டுகொள்ளவில்லை. எங்களுடைய நியாயமான கோரிக்கைகளுக்காக போராடிய போது எத்தனை முறை கைது செய்யப்பட்டு இருக்கிறோம்… ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்… இன்றைக்கு நீலிக்கண்ணீர் வடிப்பது ஏற்க இயலாதது, கடும் கண்டனத்திற்குரியது.

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் 3 முறைக்கு மேல் தலைமை செயலகத்தில் ஆசிரியர் சங்க தலைவர்களை அழைத்து பேசியிருக்கிறார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பலமுறை எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். 3 அமைச்சர்கள் கொண்ட குழுவும் எங்களை அழைத்து பேசியது. தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகள் ஒன்றன்பின் ஒன்றாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. பிரதான கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தை முதல்வர் நிச்சயம் விரைவில் அமுல்படுத்துவார் என நம்புகிறோம். இந்த ஆட்சியில் பெறவில்லை என்றால் வேறு எந்த ஆட்சியிலும் பெற முடியாது என்ற நம்பிக்கையில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு போராடும் இடைநிலை ஆசிரியர்களுக்காக குழு அமைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பகுதி நேர ஆசிரியர்களை பொறுத்தவரை 2500 ரூபாய் ஊதியத்தை ஏற்றி வழங்கியிருந்தாலும் அவர்களுடைய பணி நிரந்தரம் செய்வது குறித்து எதிர்காலங்களில் முடிவெடுக்கப்படும். தகுதித்தேர்வு முடித்தவர்கள் வயது வரம்பை மீண்டும் உயர்த்தி ஆணை பிறப்பித்தும் உத்தரவிட்டிருக்கிறார். போராடுபவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் அரசாக தமிழக அரசு செயல்படுகிறது. ஆட்சியில் இருக்கும்போது எதுவும் செய்யாமல் எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி ஆசிரியர்களுக்காக நீலிக்கண்ணீர் வடிப்பது வேதனை அளிக்கிறது. இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

The post ஆசிரியர்கள் மீது அக்கறை இருப்பதுபோல் நீலிக்கண்ணீர் வடிக்கும் எடப்பாடி பழனிசாமி: மாநில தலைவர் தியாகராஜன் கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: