கூட்டணி அதிருப்தி

நாடாளுமன்ற தேர்தலில் ஒன்றிய பாஜவுடன் கூட்டணி என்று மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் தேசிய தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவகவுடா முடிவு செய்து அறிவித்தார். இதை கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியும் வழிமொழிந்தார். இதை விமர்சித்த காங்கிரஸ் கட்சி ‘தேவகவுடா அவரது கட்சியில் இருந்து மதசார்பற்ற என்ற வார்த்தையை எடுத்துவிடலாம்’ என்று கூறியது. காங்கிரஸ் கட்சி விமர்சிப்பது அரசியல்ரீதியானது என்று எடுத்து கொண்டாலும் மதசார்பற்ற ஜனதா தள நிர்வாகிகளே இக்கூட்டணியை விரும்பாமல் அதிருப்தியும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

கர்நாடகாவில் மண்டியா, ராம்நகரம், சென்னபட்டணா, கோலார், ஹாசன் உள்ளிட்ட சில பகுதிகளில் மதசார்பற்ற ஜனதா தள கட்சிக்கு கணிசமான வாக்கு வங்கி இருக்கிறது. அதிலும் குறிப்பாக இஸ்லாமியர்களின் வாக்குகள் அதிகம் இருக்கிறது. இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் மஜத பாஜவுடன் கூட்டணி அமைத்ததால் மஜதவில் இருக்கும் சிறுபான்மையின பிரிவு தலைவர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இதில் பல மாவட்ட இஸ்லாமிய தலைவர்கள், நிர்வாகிகள் பதவியை ராஜினாமாவே செய்துவிட்டனர்.

கடந்த சட்டமன்ற தேர்தலின் போது இஸ்லாமியர்களின் வாக்கு மஜதவுக்கு கிடைக்கவேயில்லை என்றும் அதனால் அவர்கள் கட்சியை விட்டு வெளியேறுவதால் எந்த நஷ்டமும் இல்லை என்றும் குமாரசாமி கருத்து தெரிவித்தார். குமாரசாமியின் இந்த குற்றச்சாட்டுக்கு அக்கட்சியின் மாநில தலைவரும் முன்னாள் ஒன்றிய அமைச்சருமான சி.எம்.இப்ராஹிம் பதிலடி கொடுத்துள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலில் முஸ்லிம் வாக்குகள் மஜதவுக்கு கிடைக்கவில்லை என்று சொல்வது உண்மையில்லை. 20 சதவீத வாக்குகள் மஜதவுக்கு கிடைத்துள்ளது.

மஜத-பாஜ கூட்டணியில் எங்களுக்கு விரும்பமில்லை. அதிருப்தியில் தான் இருக்கிறோம். வரும் 16ம் தேதி கட்சியில் உள்ள அனைத்து தரப்பினருடனும் ஆலோசித்து அதன் பிறகு எடுக்கப்படும் முடிவு குறித்து தேவகவுடாவிடம் தெரிவிப்பேன் என்று கூறியுள்ளார். மஜதவில் உள்ள சிறுபான்மையினர் கூண்டோடு வெளியேறினால் அவர்கள் அனைவரும் நிச்சயம் காங்கிரஸ் கட்சியில் தான் இணைவார்கள். இதனால் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சிக்கு நாடாளுமன்ற தேர்தலில் பிரகாசமான வெற்றி வாய்ப்பு ஏற்படும் என்பது அரசியல் விமர்சகர்களின் கருத்தாக இருக்கிறது.

பாஜவுடன் கூட்டணி அறிவித்த நாள் முதல் மதசார்பற்ற ஜனதா தள கட்சியில் அதிருப்தி ஏற்பட்டு நிர்வாகிகளின் ராஜினாமா தொடர்ந்த வண்ணம் இருக்கிறது. கூட்டணி அறிவித்த ைகயோடு தொகுதி உடன்பாடு செய்து கொண்டு பிரசாரத்தில் டிசம்பர் மாதம் முதல் களம் இறங்க திட்டமிட்டிருந்த கர்நாடக பாஜ தலைவர்கள் இதனால் குழப்பத்தில் உள்ளனர். இதே போன்று தமிழகத்தில் பாஜ கூட்டணியில் இருந்து அதிமுக விலகிவிட்டது. ஆந்திராவில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து நடிகர் பவன்கல்யாண் கட்சி வெளியேறிவிட்டது. இப்படி அனைத்து மாநிலங்களிலும் பாஜவுடன் கூட்டணிக்கு எதிர்ப்பு வலுத்து வருவதால் பாஜ தேசிய தலைமையும், மாநில தலைமையும் விழிபிதுங்கி நி்ற்கின்றனர். இந்த பிரச்னையை எப்படி கையாள்வது என்று பாஜ மூத்த தலைவர்கள் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறார்களாம்.

The post கூட்டணி அதிருப்தி appeared first on Dinakaran.

Related Stories: